தூத்துக்குடியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நவராத்திரி மற்றும் தசரா திருவிழா இந்த ஆண்டு இன்று 23ஆம் தேதி முதல் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தூத்துக்குடியில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், வடபாகம் சந்தன மாரியம்மன் கோவில், மட்டக்கடை உச்சினி மாகாளி அம்மன் கோவில், இரண்டாம் ரயில்வே கேட் பத்ரகாளி அம்மன் கோவில், மேல சண்முகபுரம் பத்ரகாளியம்மன் கோவில், கீழ சண்முகபுரம் பத்ரகாளி அம்மன் கோவில், இரட்சணியபுரம் சந்தன மாரியம்மன் கோவில் உள்பட 25 கோவில்களில் நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமாகி தீபாரனை நடைபெற்றது. பின்னர் கொடி யானை மீதும் வண்டிகளில் மீதும்கொடி பவனி நடைபெற்றது. பின்னர் இன்று அதிகாலை 5 மணிக்கு அனைத்து கோவில்களிலும் கொடியேற்றம் நடந்தது.
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு தினசரி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு தீபாரணை கொலு கண்காட்சி நடக்கிறது. தசரா திருவிழாவின் ஏழாவது நாள் நிகழ்ச்சியாக 29ஆம் தேதி இரவு நரகாசுரன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. உச்சகட்ட நிகழ்ச்சியாக பத்தாம் நாள் திருவிழாவாக அக்.2ஆம் தேதி பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் இரவு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 3ம் தேதி அதிகாலை சப்ரத்தில் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு வெள்ளைச் சாத்தும் 4ம் தேதி பச்சை சாத்தி தூத்துக்குடி சிவன் கோவில் முன்பு எதிர் சேவை நிகழ்ச்சி உடன் சப்பர பேரணி நடக்கிறது.


