
திரு. முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களே, தாங்கள் எழுத்தாளர், தொல்லியல் ஆர்வலர் போன்ற பன்முகத் திறமையாளர். தமிழக அரசு தமிழ்ச்செம்மல் விருது, போன்ற பல விருதுகளுக்கு சொந்தமானவர். தூத்துக்குடி மாவட்டத்தில் இடைச்சங்கம் என்ற தலைப்பில் சிறப்புரையாக, தூத்துக்குடி 6ஆவது புத்தகத்திருவிழா கண்காட்சியில் 27.08.2025 புதன்கிழமை விநாயகர்சதுர்த்தி அன்று சாயங்கால வேளையில் தாங்கள் பேசிய கருத்துக்கள் அனைத்தும் முத்தான முத்துக்களே.
தூத்துக்குடியில் வியாபார மக்கள் அதிகமிருப்பதால் புத்தகம் வாசிப்பது குறைவு என்ற கருத்துக்களில் தொடங்கி, தூத்துக்குடியில் 75ஆவது சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஊர்முழுக்க உள்ளார்கள் என்ற பதிவினை பதிவு செய்ததும் மிகவும் முக்கியத் தகவல்கள்.
சிறுகதை எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, அவற்றை தொகுப்பாக தொகுத்து 100க்கும் மேற்பட்டவர்கள் நம் மாவட்டத்தில் இருக்கின்றார்கள் போன்ற தகவல்கள் தாங்கள் கூறியது. வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் கல்லூரி எழுத்தாளர்கள், தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் நம் மாவட்டத்தில் இருக்கின்றார்கள் என்ற மகிழ்ச்சியான தகவல்கள் நம் மாவட்டத்தில் உள்ளவர்கள் புத்தகத்தின் வாசிப்பை நேசிக்கும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் என்று கூறியதும் மிகச் சிறப்பு. இதற்கான முனைப்பினை உந்துதலோடு செய்ய தாங்கள் முயற்சித்தமைக்கு தங்களுக்கு எனது பணிவான வாழ்த்துக்கள் ஐயா.
தூத்துக்குடி முத்துக்களுக்கு மட்டும் பெருமையல்ல பல பெருமைக்குரியது என்பதும் உண்மையே! ஏவுகளம், விமானநிலையம், துறைமுகம் போன்றவை மட்டுமல்லாமல் நவீனகாலத்தை தாண்டி 2500 ஆண்டுகளுக்கு முன்னால் கொற்கை துறைமுகம் இருந்தது குறித்தும் பேசியுள்ளீர்கள். தூத்துக்குடி ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் பிரிந்ததிலிருந்து எவ்வாறு உள்ளது என்பது குறித்து தாங்கள் எளிமையாக கூறியதும், பொருநை அருங்காட்சியகம், கீழடியை விட 3 மடங்கு பெரிதாக 50 கோடி செலவில் திருநெல்வேலி மாவட்டத்தில் ரெட்டியார்பட்டியில் அமைய உள்ளது என்பது போன்ற பல தகவல்கள் மிகவும் அருமை.
5100 வருடங்களுக்கு முன்னால் தூத்துக்குடியில் மாவட்டத்தில் இரும்பை உருக்கி பயிர் தொழில்களுக்கு பயன்படுத்திருக்கின்றான் மனிதன் என்பதை சிவகளை அகழாய்வு உறுதி படுத்தியுள்ளது. நாகரீகம் தோன்றியது நமது மாவட்டம் என்று கூறியதும் தமிழக அரசு உறுதுணையாக தற்போது வரை இருந்து வருகின்றது என்பதையும் தாங்கள் அழுத்தமாக கூறியதும் மிகவும் பெருமைக்குரிய விசயம்.
பொருநை வழி நாகரீகம் 5100 வருடங்களை கடந்து நிற்கிறது என்பது நாம் பெருமைப்பட சொல்லிக் கொள்ளலாம் தானே! ஓரிஸா பாலு என்ற கடல்சார்ந்த ஆய்வாளர் ஆதிச்சநல்லூரை சுற்றியுள்ள ஊர்கள் பெயர்கள் உலக நாடுகளில் பல இடங்களில் உள்ளது போன்ற கருத்து ஆச்சரியத்த்தினை ஏற்படுத்தியது. எழுத்தாளர் சாத்தான்குளம் திரு. ராகவன் ஆதிச்சநல்லூரும் பொருநை வெளி நாகரீகமும் என்ற நூலை தமிழில் எழுதாவிடில் ஆதிச்சநல்லூர், கொற்கை வெளியே தெரிந்திருக்காது என்ற செய்தியும் தாங்கள் கூறி கேட்டறிந்தது மிகவும் சிறப்பு
அவர் இலங்கைக்கு சென்று அனைத்து தகவல்களையும் திரட்டி ஆய்வு செய்து ஆதிச்சநல்லூர் புத்தகம் எழுதியது, கோநகர் கொற்கை புத்தகத்தினை எழுதியது என்ற கருத்து நம்மை பெருமைபட வைக்கிறது. மாவட்ட நூலகர் மீனாட்சி சுந்தரம் அய்யா சாத்தான்குளம் ராகவன் அய்யா நூல் அட்டைபடத்திளை வெளியிட்டு இருப்பது மிகச்சிறப்பாக இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் இந்திய தொல்லியல் கழகம் தொடங்கிய போது (1902) அலெக்ஸாண்டர் ரியா அவர்கள் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்து அதில் கிடைத்த பொருட்களை சென்னை கன்னிமரா நூலகத்தின் அருகில் உள்ள கட்டிடத்தில் காட்சிபடுத்திய செய்திகள் தாங்கள் கூறி கேட்டறிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சியே.
லண்டன் மற்றும் பிற வெளிநாடுகளில் ஆதிச்சநல்லூர் பொருட்கள் இருப்பது குறித்த தகவல்கள். 1920 மொகஞ்சாதாரா ஆய்வு நடந்த போது ஆதிச்சநல்லூர் பெருமை மீண்டும் வெளியே வந்தது. 1922 இல் ஆங்கிலத்தில் பொருநை ஆற்றில் நாகரீகமே சிந்து சமவெளி வரைதொடர்ந்துள்ளதுஎன வங்க தேசத்து அறிஞர் பானர்ஜி கூறிய செய்தி அரிய தகவல்கள். உலக நாகரீகத்தின் தொட்டில் என எழுத்தளார் சாத்தான்குளம் திரு. ராகவன் அவர்கள் கூறியதும் சாலச்சிறந்தது.
3500 ஆண்டுகளுக்கு முன்னால் ஆதிச்சநல்லூர் மக்கள் சுகாதாரத்தினை இடுக்கி போன்ற பொருளை பயன்படுத்தினார்கள். அந்த பொருள்கள் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ளது என் தகவல் தமிழர்கள் பண்பாட்டை பெருமை பட வைக்கிறது. நமது மண் இடைச்சங்கம் என்றும் கடைச்சங்கம் மதுரை என்று தெளிவுரைத்ததும், ஆத்தூர் அருகில் உள்ள கீரனூர், நக்கீரன் பெயரால் அறியப்பட்டது என்ற தகவலும் சிறப்பு. இடைச்சங்கம் பற்றி விளக்கியமையும், பாண்டிய மன்னருக்கு செங்கோல் கொடுத்த ஆதினம் பற்றி விளக்கியது. பெருங்குளம் சிவன்கோவில் அம்பாள் சந்நிதியில் திருக்குறள் அறங்கேற்றியதன் நினைவாக திருவள்ளுவர் சிலை உள்ளது என்ற தெளிவுரைகள் மகிழ்ச்சியை தந்தது. சங்ககால பாடல்கள் கற்பனை அல்ல உண்மை என்ற கூற்றை தொல்லியல் நிரூபித்து வருகிறது என்ற தகவல் அருமை அருமை.
1902 , 2004 ஆகிய ஆணடுகளில் நடந்த அகழாய்வில் கிடைத்த பெரிய முதுமக்கள் தாழியில் இரு உடல்கள் இருந்தது என்பது குறித்த செய்திகள் ஆச்சரியப்பட வைத்தது. நண்பர்கள் குறித்த உங்கள் வாழ்வில் நடந்த ஆய்வுகள், அரபுநாட்டிலிருந்து குதிரை இறக்குமதி செய்தது, அதன் நினைவாக காயல்பட்டினத்தில் உள்ள பரி தெரு உள்பட தகவல் இதுவரை நான் அறியாதவை. ஓலைச் சுவடி நூலாக மாறியது. நூல் தற்போது டிஜிட்டல் ஆவது குறித்து பேசிய தகவலும். தமிழத்தாத்தா உ.வே.சா அவர்களுக்கு பத்துப்பாட்டு குறுந்தொகை போன்ற ஓலைச்சுவடிகள் கிடைத்த விவரம் சிறப்பாக இருந்தது.அதற்கும் ஒரு படி மேலே போய் நம்மாழ்வார், மதுரைகவியாழ்வாரின் குரு சிஷ்யர் உறவையும் நாலாயிரம் திவ்விய பிரபந்தம் உருவாக காரணமான ஆழ்வார்திருநகரி குறித்து தகவலும் அருமை.
குறிப்பாக பள்ளி மாணவர்கள் முதல் ஊர் மக்கள் அனைவரும் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை ஆகிய ஊர்களுக்கு சுற்றுலா செல்ல வலியுறுத்தியது பெருமையாக இருந்தது. உண்மைதானே நமது ஊர் பெருமையை நாமே அறியாவிடில் யார் அறிவார். முதலில் நான் எனது மாணவர்களை அழைத்துக்கொண்டு ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களுக்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். தூத்துக்குடி மாவட்ட மக்கள் இடைச்சங்க காலத்திற்குரியவர்கள், சுகாதாரம், நாகரீகம் போன்ற அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து கொண்டிருக்கின்றோம் என்பதை உரக்க கூறியதும் முற்றிலும் உண்மை.
தூத்துக்குடி மண் பிரமாண்டமான மண், மற்றவர்களுக்குஎடுத்துக்காட்டாக விளங்கும் மண், தூத்துக்குடி மண். தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகத்திற்கே எடுத்துக்காட்டான மண் என்று கூறியதில் இருந்து தாங்கள் எந்த அளவு நம் மாவட்டத்தை நேசித்து வருகின்றீர்கள் என்பதை புரிந்து கொள்கின்றேன். தூத்துக்குடி மாவட்டத்தின் மேல் தீராத பாசம், நேசம் என்னை வியக்க வைத்தது. தங்களுக்கு வாழ்த்துரை எழுதும் அளவு எனக்கு அனுபவம் இல்லை. ஆனால் எழுதவேண்டும் என்ற ஆசையை உடனே நிறைவேற்றி விட்டேன். நான் தங்கள் எழுத்தினையும் ,ஆதிச்சநல்லூர், தாமிரபரணி ஆற்றின் மேல் உள்ள பற்று ஆகியவற்றை கண்டு வியந்தவள். நானும் தங்களின் பரம விசிறி, விசுவாசி என்பதை அன்புடன் கூறிக் கொள்கின்றேன். முத்தான தங்களின் சிறப்புரையை உண்மையிலேயே நான் கேட்க தவறிவிட்டேன் என்றாலும் பரணி டிவி மூலம் யூ டியூப் மூலம் அதை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தூத்துக்குடி புத்தக கண்காட்சியில் பேசும் அறிஞர்கள் எல்லோரும் தரும் தகவல்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. நாமும் இந்த மண்ணில் வாழ்கிறோம் என்பது எமக்கு கிடைத்த பெருமை
நன்றி


