தூத்துக்குடியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் பி.கீதா ஜீவன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை சாந்தோம் செயிண்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் குத்துவிளக்கேற்றி சிறப்பித்தார்.
2025-26-ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், உயர் மருத்துவ சேவைகள் வழங்க ரூ.12.78 கோடி செலவில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் தொடங்கி வைத்தார். இந்த உயர் மருத்துவ சேவை சிறப்பு முகாமிற்கு ரூ.1,08,173 வீதம் மாநிலம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்களுக்கு ரூ.13.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம், 388 வட்டாரங்களில் 1,164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒரு முகாம் வீதம், பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 இலட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள் தொகை 10 இலட்சத்திற்கு குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும், என மொத்தம் 1,256 முகாம்கள் நடத்தப்படும்.
இம்முகாம்கள் சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரகப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன. 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள். பழங்குடியினர் மற்றும் சமூக- பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக்கல்வித் துறை, உயர் கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை. மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து முகாமில் மருத்துவ பயனாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை பார்வையிட்டு, பயனாளிகளிடம் கலந்துரையாடினார். மேலும், “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாமில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு மருத்துவப் பிரிவுகளை பார்வையிட்டார். இந்த நிகழ்வை காணொளிக் காட்சி வாயிலாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் பார்வையிட்டு, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ பரிசோதனை அரங்குகளில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறுவதை பார்வையிட்டார்.
இம்முகாமில் மேயர் பெ.ஜெகன், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சிவகுமார், மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.யாழினி (தூத்துக்குடி), மரு.வித்யா (கோவில்பட்டி), இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.பிரியதர்ஷினி, துணை இயக்குநர்கள் மரு.பொன்ரவி (குடும்ப நலம்), மரு.சுந்தரலிங்கம் (காசநோய்), மரு.யமுனா (தொழு நோய்) உட்பட அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


