தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நிலம் அளித்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம், தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் மாநில தலைவர் காந்தி விடுத்துள்ள அறிக்கை “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அபிவிருத்திக்காக தெற்கு விரபாண்டியபுரம், ஏ குமரட்டியபுரம் ஏ குமரகிரி மக்களிடம் சுமார் 242 ஏக்கர் இடம் தமிழக அரசு சிப்காட் மூலம் கையகப்படுத்தியது. அந்த நிலத்திற்கு 2008 ஆம் ஆண்டு ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் ரூபாயும் 2010 ஆம் ஆண்டு ஏக்கர் ஒன்றுக்கு ஆறு லட்சத்து 50 ஆயிரம் 2015 ஆம் ஆண்டு ஏக்கர் ஒன்றுக்கு 15 லட்சத்து 55 ஆயிரம் 2018 ஆம் ஆண்டு ஏக்கர் ஒன்றுக்கு 18 லட்சமும் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரே அரசாணையின் மூலமாக கையகப்படுத்தப்பட்ட இடமாகும். இந்த இடத்திற்கு 6,50,000 இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு 2013 ஆம் ஆண்டு 31.10.2013 அன்று தூத்துக்குடி தனி வட்டாட்சியாளர் அலுவலகம் சிப்காட் அவகு-1 தூத்துக்குடி வட்டாட்சியாளர் சார்பாக பாதிக்கப்பட்ட இந்த இடம் கொடுத்த மக்களுக்கும் 6,50,000 இழப்பீட்டுத் தொகை வழங்கலாம் என்று உத்தரவு பிறப்பித்து அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.
அந்த கடிதத்தின் படி இன்று வரை நிலம் கொடுத்த மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. எனவே அந்த இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் அல்லது ஸ்டெர்லைட் அபிவிருத்திக்காக கையகப்படுத்தி இடத்தை தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுத்த உத்தரவு ரத்து செய்து விட்டதால் அந்த நிலத்தை இடம் கொடுத்த மக்களுக்கே திருப்பி வழங்க வேண்டும். அல்லது நியாயமான இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி வருகிற 4ஆம் தேதி வீரபாண்டியபுரம் கிராமத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.


