கோவில்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்தனர். இருதரப்பைச் சேர்ந்த 9பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தில் நிர்வாகிகள் யாரையும் முறையாக நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கட்சி நிர்வாகிகள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி தொடர்பாக கோவில்பட்டி செக்கடித் தெருவைச் சேர்ந்த ராஜா தலைமையிலான அணிக்கும், வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த சுரேஷ் தலைமையிலான அணிக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாம். இந்த நிலையில், ராஜா அணியைச் சேர்ந்த மனோஜ்குமார் வாட்ஸ்ஆப்பில் சுரேஷ் பற்றியும், அவர் மீதுள்ள வழக்குகள் பற்றியும் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த வியாழக்கிழமை இரவு இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் காயமடைந்த ராஜா, மனோஜ்குமார், ராமமூர்த்தி, சுரேஷ் ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில், சுரேஷ், அவருடைய மனைவி சத்யா, சதீஷ்குமார், செந்தில், முனீஸ்வரன், கணேஷ் ஆகியோர் மீதும், சுரேஷ் அளித்த புகாரின் பேரில், ராஜா, மனோஜ்குமார், ராமமூர்த்தி ஆகியோர் மீதும் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


