நீட் தேர்வில் வெற்றி பெற்று திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சி ராமசாமிபுரத்தைச் சேர்ந்த பனைத் தொழிலாளி பரமசிவன் – விஜயரதி தம்பதி மகன் செல்வ சதீஷ். திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர், கடந்த 2022-23ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றார். தொடர்ந்து இரு ஆண்டுகள் பயிற்சி பெற்று நீட் தேர்வுக்கு எழுதினார். அதில் 720-க்கு 480 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.
மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 உள் ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்தார். அவருக்கு, திருச்செந்தூர் அரசுப் பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் ஆனந்த ராமச்சந்திரன், மேலாண்மைக் குழு தலைவர் பிச்சம்மாள் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


