இந்தியாவின் மிக பிரசித்தி பெற்ற நதிகளில் மிக முக்கிய நதி தாமிரபரணி நதி. இந்த நதி வற்றாத ஜுவ நதி. நதியின் புகழ் பாடு வது என் பணி. புகழ் பாடி னால் மட்டும் போதாது. அதை காப்பாற்ற வேண்டும். அந்த பணியை நம்மால் செய்ய இயலாது. அரசு அதற்கு உதவ வேண்டும். மக்களும் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் கொஞ்ச காலமாக தாமிரபரணிக்கு என்று நன்மைகள் எதுவும் நடைபெறவில்லை. தாமிரபரணியை காக்க நடவடிக்கை இல்லை. மாறாக தாமிரபரணி மணலை அள்ளி மாசுப்படுத்திக்கொண்டிருக்கிறோம். இதனால் சாக்கடை கலந்து தாமிரபரணி தனது நிலையை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக மதுரை உயர் நீதி மன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந் தேன். அந்த வழக்கில் வெற்றியும் கிடைத்துள்ளது. நதியை சுத்தப்படுத்தி கழிவு நீரை ஆற்றில் உள்ளாட்சி அமைப்பினர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டபங்கள் படித்துறைகளை பராமரிக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதியரசர்கள் தீர்பளித்தனர். ஆனால் அதை நடைமுறை படுத்த அரசு தவறியது. எனவே இந்த வழக்கை மீண்டும் நீதிமன்றம் தானே முன் வந்து நடத்தியது. இந்த வழக்கில் தாமிரபரணியை காப்பாற்ற நீதியரசர்கள் சுவாமி நாதன், புகழேந்தி ஆகியோர் நேரிடையாக தாமிரபரணி நதிக்கரைக்கு வந்து ஆய்வு செய்தனர். சாக்கடை கலக்கும் இடங்களை கண்டு மனம் குமுறினர். தாமிரபரணி குறுக்குத்துறை பகுதியில் நெடு நெடுவென நீண்டு கிடக்கும் படித்துறை வழியாக நடந்து, குறுக்குத்துறை நீராழி மண்டபங்களுக்குள் நுழைந்து பார்வையிட்டனர். வருங்காலத்தில் இதுபோன்று படித்துறைகளை கட்ட இயலுமா? மண்டபங்களை உருவாக்க முடியுமா?. அப்படியென்றால் இந்த படித்துறை மற்றும் மண்டபங்களை ஏன்காப்பாற்ற முடியவில்லை என அரசுக்கு பல்வேறு கேள்விகளை கேட்டனர். தொடர்ந்து பல்வேறு உத்தரவுகளை போட்டனர்.
வற்றாத ஜீவ நதி வற்றிம் அளவுக்கு ஆக காரணம் யார். அரசு என்று பதில் சொல்லி முடித்து விடக்கூடாது. முழுக்க இந்த நதி மாசுப்பட பொதுமக்களே காரணம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லாததே காரணம். நமது நதி எப்பேற்பட்ட நதி என அவர்களுக்கு புரியவில்லை. இந்த நதி இல்லையென்றால் குடிதண்ணீருக்கு என்ன செய்வோம் என்பதை அறியவில்லை. ஏதோ ஒன்று நமது நகரை சுற்றி வருகிறது. நமக்கும் இந்த நதிக்கும் எந்த உறவும் இல்லை என நினைக்கிறார்கள். எனவே பல ரூபத்தில் பல தலைப்பில் தாமிரபரணி நதியைப் பற்றி பேசி வருகிறேன். எப்படியாவது நதியின் புகழை வருங்கால மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன். எனவே தான் எனது கற்பனையில் சுப்புடு தாத்தா என்ற வயதான பாத்திரத்தினையும், பொன்னி என்ற பேத்தியையும் உருவாக்கியுள்ளேன். அவர்கள் இவரும் இனி நமது நதியை சுற்றி வருவார்கள். உங்களோடு பயணிப்பார்கள். பேத்தி பொன்னிக்கு தாமிரபரணி வரலாறு சொல்லி புரியவைப்பார் சுப்புடு தாத்தா. ஏன் பேத்திக்காக மட்டுமா அவர் கதை சொல்லுகிறார். உங்களுக்கும்தான் & அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு
“யப்பா என்னா வெயிலு. என்னா வெயிலு” சுப்புடுதாத்தா சோர்வாக வந்து திண்ணையில் உட்கார்ந்தார்.
“எம்மா மவளே. கொஞ்சம் நீத்தண்ணீ கொண்டு வா”
தாத்தாவுக்கு வயது 85. ஆனாலும் வயல் வேலைகளுக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்தார். வீட்டில் விருந்துக்கு வந்துள்ள தனது மகளும் பேத்தி பொன்னியும் இருக்கிறார்கள்.
பொன்னிக்கு வயது 8 . துறுதுறுவென இருப்பாள். தாத்தாவை பார்த்தவுடன் வெளியே ஓடி வந்தார்.
“தாத்தா”. அப்படியே தாத்தாவை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
அவர் மீது வடிந்த வேர்வை, இவள் உடலில் போட்டிருந்த புது துணி மீது படிந்தது.
“அய்யோ பொன்னி. தள்ளி நில்லு. தாத்தா மேலே உள்ள வேர்வை ஒட்டிக்கும்”. சுப்புடு தாத்தா பேத்தியை தடுத்தார்.
அப்போது மகள் வந்தாள்.
“என்னப்பா இப்படி சொல்லுதீய. உங்க வேர்வை தான் என்னை படிக்க வைச்சி ஆளாக்கியிருக்கு. அந்த வேர்வையோட மகிமை குழந்தைகளுக்கு தெரியணுமுன்னுதான் வருசம் வருசம் கோடை விடுமுறைக்கு அவளை ஊருக்கு கூட்டிட்டு வாறேன். நீங்க என்னனன்னா வேர்வை ஒட்டிக்கும் தள்ளிப்போன்னு சொல்றீய”. தனது தந்தையை பார்த்து திட்டினாள்.
சுப்புடு தாத்தா சிரித்தார். “இங்கே பாருமா? ஒரு காலத்தில எங்கள் தாத்தா விவசாயம் தான் உயிருன்னு நினைச்சாவ. எங்க அப்பாவும் அதையே தொடர்ந்தாவ. ஆனால நான் விவசாயம் செஞ்சாலும், என் பிள்ளையளை படிக்க வைக்கணுமுன்னு நினைச்சு உங்களை படிக்க வச்சேன். நீங்க படிச்சு பட்டணத்துக்கு போய் செட்டில் ஆகிட்டிய. இப்போது விவசாயத்தை நீங்க நினைச்சு பாக்கிறது கிடையாது. இனிமே உங்க பிள்ளைய எப்படி இங்க வரப்போகுது. அதனால பாவம் அது பாட்டுக்கு படிச்சி பெரிய ஆள ஆகட்டும். இந்த விவசாயிகிட்ட ஒட்டவேண்டாம்” விரக்தியாக பேசினார்.
“இல்லை அப்பா. உங்க தாத்தா உங்க அப்பாகிட்ட ஒப்படைச்ச மாதிரி. உங்க அப்பா உங்ககிட்ட ஒப்படைச்ச மாதிரி. நீங்க எங்க கிட்ட விவசாயத்தை ஒப்படைச்சி இருக்கணும். அதை விட்டது தப்பு. இப்போ பாருங்க. நாமா வற்றாதஜீவ நதி தாமிரபரணி கரையில இருக்கோம். ஆனால் இந்த நதியோட பெருமை யாருக்கு தெரியுது. சாக்கடையை கலந்து ஒண்ணுக்கும் உதவாத நதியா மாத்தி விட்டுட்டோம். இந்த நதி பெருமை தெரியணும். என் மகளுக்கு இந்த நதி பெருமையை சொல்லிக்கொடுங்க. நதிக்கிட்ட கூட்டிட்டு போய் காட்டுங்க. நீச்சல் கத்து கொடுங்க”. என்றாள் மகள்.
சுப்புடு தாத்தா நினைத்து பார்க்கிறார்.
“தண்ணீரே வருங்கால மனிதர்களின் ஜுவ ஊற்று. எனவே பல யுக்திகளை கடந்த நவீன உலகத்தில் உயர்ந்தாலும், பணம் ஈட்டினாலும் , பல்வேறு விஞ்ஞான உலகத்தில் உலகத்தினையே உவருவாக்கி வைத்தாலும். தண்ணீர் இன்றி உன்னால் வாழ முடியுமா? அதை நாம் எத்தனை பேர் நினைத்து பார்க்கிறோம்.
மனிதன் பறவையை கண்டான் விமானம் படைத்தான். என்பார்களே அந்த விமானம் படைக்கும் முன்பே புஷ்கர விமானம் என ஒன்றை படைத்து சொர்க் கத்துக்கு சென்றவர்கள் நம்மவர்கள். அது உண்மையா?, இருக்குமா?, இல்லையா? என எண்ணி நமது நேரத்தினை போக்க வேண்டியது அவசியம் இல்லை. அது கதையாக இருந்தாலும் கூட யுகிக்கிற தன்மை நமது முன்னோருக்கு இருந்து இருக்கிறது அல்லவா?. வரும் காலத்தில் படகு வரும், அதையும் தாண்டி விமானம் வரும் என்பதெல்லாம் தெரிந்த நமது முன்னோர்கள் அதை பற்றி பாடி வைத்து விட்டு சென்று இருக் கிறார்கள் என்றே எண்ணுவோம். இந்த இயற்கையே நமக்கு வரம்.
தற்போது நாம் இயற்கையை கூட பேணுவது இல்லையே.
நமது தமிழர் கலாச்சாரமே இயற்கையை பேணி பாது காப்பதில் தான் இருக்கிறது. அதற்காக தான் அவர் கோயிலை உருவாக்குகிறான். வருடத்துக்கு ஒரு முறை கோயிலுக்கு வருஷாபிசேகம் நடத்துகிறான். 12 வருசத்துக்கு ஒரு முறை கும்பாபிசேகம் நடத்து கிறான் ஏன்?.
தினமும் நாம் வணங்கும் கடவுள் உயிரோட்டமாக இருக்கிறான். அவனுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற எண்ணம் நமது மனதில் மேலோங்குகிறது. அவனை மரியாதைசெய்தால் அவன் நம்மை காப்பாற்றுவான். என்று நம்பிக்கையில் செய்கிறான். எனவே இந்த செயலை மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என வைத்துக் கொள்ளலாம். சிலர் சாமி. அது ஒரு கல். அதில் என்ன உயிரோட்டம் இருக்கிறது? என நினைக்கலாம். அப்படியே எண்ணும் அந்த மக்களுக்கும் சொல்வோம். இதில் ஒரு சுற்று புற சூழல் பாதுகாப்பு இருக்கிறது. ஆகவே நமதுமுன்னோர்கள் அதற்கென கதைகளைஉருவாக்கி அதை தனது சந்தத்தியினரிடம் கூறி, அதை பாதுகாக்க வழி வகுத்து உள்ளார்கள். எனவே நதிக்கரையோரம் சொல்லும் கதைகள் எல்லாம் மிகவும் முக்கியமானவை. ஆலயங்களை தூய்மை படுத்தும் போதும், நமது இல்லத் தினையும் பாதுகாக்கும் போது நாம் வாழும் இடங்களையும், அடிக்கடி சென்று வரும் இடங்களையும் நம்மளை அறியாமலேயே சுத்தப்படுத்துகிறோம். இதனால் சுற்றுபுறசூழல் பாதுகாக்கப்படுகிறது. வருடத்துக்கு ஒரு முறை பொங்கல் திருவிழாவிற்கு வீட்டை வெள்ளை யடிக்கிறோம். போகியில் பழசை துறக்கிறோம். புதுசாக வீட்டை வண்ணம் தீட்டும்போது புது சுவாசம், சுற்றுபுற சூழல் பாதுகாப்பு, போன்ற பல அற்புதங்கள் நம் வாழ்வில் நிகழ்கிறது”.
சுப்புடு தாத்தா தனது மகள் சொன்னதை நினைத்துப் பார்க்கிறார். நமது நதியை பற்றி யாருக்கு தெரிகிறது. நதியை யாராவது சுத்தப்படுத்துகிறார்களா?
“சரி. ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 40 லிட்டர் தண்ணீர் என நான்கு மாவட்ட மக்களுக்கு தாமிரபரணி தர வேண்டும் என ஒரு எழுதப்படாத சட்டம் ஒன்றுள்ளது. அதன்படி தாமிரபரணி ஆற்றில் இருந்து நூற்றுக் கணக்காக உறை கிணறு போடப்பட்டு, அந்த உறை கிணறு மூலமாக பல கோடி லிட்டர் தண்ணீரை நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டத்துக்கு குடிதண்ணீராக தருகிறோம். ஆனால் அந்த நதிக்கு ஒருவிழா உண்டா?
அந்த தாமிரபரணிக்கு வருஷாபிசேகம் உண்டா?. 12 வருசத்துக்கு ஒரு முறை கும்பாபிசேகம் உண்டா?. ஒரு போகி பண்டிகை உண்டா? வருடத்துக்கு ஒரு முறை வெள்ளையடிப்பது உண்டா?. அப்படி எதுவுமே நடந்தது இல்லை. ஆனால் போகி அன்று நிறைய குப்பைகளை ஆற்றில் கொண்டு கொட்டுகிறோம். தினமும் நமது கழிவு தண்ணீர் சாக்கடை பல கோடி லிட்டர் தாமிரபரணியில் கொண்டு கொட்டுகிறோம். இதற் கெல்லாம்காரணம் யார். தாமிரபரணியைப்பற்றி விழிப்புணர்வு உண்டா-?. வேண்டு மல்லா?. இந்த விழிப்பு ணர்வை யார் ஊட்டுவார்?”.
“நாம் தான் ஊட்ட வேண்டும். நமது சந்நிதிகளுக்கு சொல்லவேண்டும். அந்த காலத்தில் பாட்டியும் தாத்தாவும் பேரக்குழந்தைகளுக்கு பல கதைகளை சொல்வார்கள். இப்போது யார் கதை சொல்லுகிறார்கள்”.
சுப்புடு தாத்தா யோசித்தார்.
“இதற்காக ஒரு விழா தாமிரபரணியில் வந்தது. அது தான் மகா புஷ்கர திருவிழா. இது தாமிரபரணியில் நடந்த கும்பா பிசேகம். தாமிரபரணி என்னும் கோயிலுக்கு, ஆலயத்துக்கு, மசூதிக்கு நடந்த ஒரு வருஷாபிசேகம். ஆனால் இது எத்தனை பேருக்கு தெரிந்தது. குடிதண்ணீர் தரும் தாமிரபரணியில் சாக்கடை கலப்பதை தடுத்தார் களா?. மண்டபங்களை சீர் செய்தா ர்களா? படித்துறையை பாதுகாத் தார்களா? மத்திய மாநில அரசுகள் சார்பில் எதுவும் இல்லை. ஆனால் பொதுமக்கள் செய்திருந்தார்கள். உழவாரப்பணியினர் தாமிர பரணி யை ஊற்று நோக்கினார்கள். இதனால் ஒருசில இடங்களில் படித்துறை கட்டப்பட்டது. பராமரிக்கப்பட்டது. ஆனாலும் தாமிரபரணி முழுவதுமாக பராமரிக்கப்படவில்லை.
புஷ்கரத்தினை முன்னிட்டு மடாதிபதிகள், ஆதின கர்த்தாக்கள், மடத்தினர், அந்தந்த பகுதியில் உள்ள கோயில் பூசாரிகள், கமிட்டியினர் தங்களால் இயன்ற அளவு தொண்டு செய்து தாமிரபரணியை காப்பாற்றினார்கள்”.
மகளிடம் சொன்னார், “உண்மைத்தான் என் பேத்திடம் நான் நிறைய தாமிரபரணி கதைகளை சொல்லப்போகிறேன். அந்த கதைகளை அவள் கேட்டு, வருங்கால சந்ததியினருக்கு அந்த வரலாற்றை சொல்லுவாள்”.
பேத்தியை பார்த்தார். பேத்தி பொன்னி ஓடியே வந்து தனது தாத்தா மடியில் உட்கார்ந்துகொண்டாள்.
தாத்தா “தாமிரபரணின்னா என்ன?” என்றாள்.
தாத்தா அதிர்ந்தே போய் விட்டார். “என் பேத்திக்கு தாமிரபரணி என்றால் என்னவென்றே தெரியவில்லை. ஆகா இதே நிலமை நீடித்தால் வருங்கால சந்ததியினர் கதி என்னவாகும்”.
பொன்னியை கையில் பிடித்துக்கொண்டு தாமிரபரணி நதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
தாமிரபரணியை பார்க்க புது தலைமுறை ஒன்று கிளம்பி விட்டது என்றவுடன் சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரியன் அப்படியே மறைந்து விட்டது.
தீடீர் மேகம் கூடியது. சாரல் அடித்தது.
அந்த சாரலில் நனைந்தபடியே பொன்னியை அழைத்துக்கொண்டு தாமிரபரணியை நோக்கி சென்றார் தாத்தா சுப்புடு.
இனி இந்த கோடைகால விடுமுறை முடியும் வரை தாமிரபரணியின் நதிக்கரையில் உலாவரும் கதைகளை சொல்லிக்கொண்டே இருக்கப்போகிறார்.
( தாமிரபரணி நதிக்கரை கதைகள் சொல்லுவோம்)


