ஓட்டப்பிடாரம் அருகே தேர்தல் தகராறில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் தலைமறைவான தி.மு.க. நிர்வாகி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் குறுக்குச்சாலை அருகே கொல்லம்பரும்பு கிராமத்தைச் சேர்ந்த முத்து பாலகிருஷ்ணன் (56). அ.தி.மு.க. பிரமுகரான இவர் நேற்று முன்தினம் காலையில் தனது ஊரில் இருந்து குறுக்குச்சாலைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
ஓட்டப்பிடாரம் அருகே சந்திரகிரி அருகில் சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென்று மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த முத்து பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான கொல்லம்பரும்பு கிராமத்தைச் சேர்ந்த வீமன் மகன் சவுந்திரராஜனை (40) கைது செய்தனர்.
இதற்கிடையே, முத்து பாலகிருஷ்ணனின் மனைவியும், முன்னாள் பஞ்சாயத்து தலைவியுமான வள்ளியம்மாள், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு வழங்கினார். அதில், ‘‘உள்ளாட்சி தேர்தல் மற்றும் தொழில் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக எனது கணவரை சிலர் லாரி ஏற்றி கொலை செய்ததாக’’ தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், முத்து பாலகிருஷ்ணனை லாரி ஏற்றி கொடூரமாக கொலை செய்த திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு: கொலையான முத்து பாலகிருஷ்ணனின் மனைவி வள்ளியம்மாள் கடந்த 1996-ம் ஆண்டு பஞ்சாயத்து தலைவியாக இருந்தார். பின்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதே ஊரைச் சேர்ந்த கருணாகரன் என்பவரது தாயார் சந்திரா பஞ்சாயத்து தலைவியாக வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் 22 ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவியாக இருந்தார். சந்திரா இறந்த பின்னர் கருணாகரனின் மனைவி கவுரி உள்ளாட்சி தேர்தலில் வென்று பஞ்சாயத்து தலைவியாக இருந்தார்.
உள்ளாட்சி தேர்தல் தகராறு மற்றும் தொழில் போட்டி காரணமாக முத்து பாலகிருஷ்ணனுக்கும், கருணாகரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் கருணாகரன் உள்ளிட்டவர்களின் தூண்டுதலின்பேரில், முத்து பாலகிருஷ்ணன் லாரி ஏற்றிக் கொடூரமாக கொலை செய்யப்பட்டதும், பின்னர் அவர் விபத்தில் இறந்ததாக நாடகமாடியும் அம்பலமானது.
இதையடுத்து கைதான டிரைவர் சவுந்திரராஜன் மீதான விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். மேலும் இந்த கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக கருணாகரன், அவருடைய உறவினர்களான மகேஷ், கற்பகராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கருணாகரன், தி.மு.க. கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். ஓட்டப்பிடாரம் அருகே உள்ளாட்சி தேர்தல் மற்றும் தொழில் போட்டி முன்விரோதத்தில் அ.தி.மு.க. பிரமுகர் லாரி ஏற்றிக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


