தூத்துக்குடியில் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் தற்கொலை முயன்ற இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துாத்துக்குடி கங்காபரமேசுவரி காலனியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள பூங்காவில் நடைப்பயிற்சி சென்றபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இதுகுறித்த புகாரின்பேரில் தென்மலை தென்குமரன் என்பவர் மீது புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளியில் வந்தவர், அந்த பெண்ணை வீட்டுக்கு சென்று மிரட்டினாராம். இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதே நேரத்தல் தென்மலைதென்குமரன் அளித்த புகாரின்பேரில் அந்த பெண் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான அனைத்து வழக்கையும் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றுவதற்கு மாவட்ட காவல் நிர்வாகம் பரிந்துரை செய்தது. இந்நிலையில் அந்த இளம்பெண் அளவுக்கு அதிகமான நெஞ்சுவலி மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தாராம்.
உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே அவர் எழுதி வைத்து இருந்த கடிதத்தில், ‘என் முடிவுக்கு தனிமை, தீராத முதுகுவலி, பொய்யான வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு பதிவு செய்ததே காரணம்’ என்று குறிப்பிட்டு இருந்தாராம். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


