முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி. இந்த திருச்செந்தூர் கோவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கோவில் முன்புள்ள கடற்கரையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை கடல் அவ்வப்போது உள்வாங்கி காணப்படும். ஆனால் கடந்த 6 மாத காலமாக கடலில் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் நேற்றைய தினம் அமாவாசை தினம் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் திடீரென உள்வாங்கி காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக சுமார் 100 அடி வரை கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கோவில் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடற்கரையில் இருந்து கடலுக்குள் 100 அடி உள்வாங்கி உள்ளது.
விடுமுறை தினம் என்பதால் கோவிலுக்கு அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள் கடற்கரையில் தெரியும் பச்சை படிந்த பாசிகள் மீது நின்று புகைப்படங்கள் எடுத்துச் செல்கின்றனர்.


