தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவதிருப்பதிகளில் ஏழாவதாகவும் அமைந்துள்ளது தென்திருப்பேரை அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயில்.
பல்லேறு சிறப்புகள் கொண்ட இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதேப்போல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் காலையும் மாலையும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று திருத்தேரோட்டம் நடந்தது. இதற்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேக தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து உற்சவர் ஸ்ரீநிகரில் முகில்வண்ணன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அங்கு கற்பூர தீபாராதனை காண்பிக்க தேர் முன் நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோபால என கோஷமிட்டபடி திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதற்கிடையில் திருத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்களின் கூட்டத்தின் நடுவே சுமார் 7 அடி உயரம் கொண்ட பெண்மணி ஒருவர் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் நின்றார். அவரை தேரோட்டத்திற்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
அந்த பெண்மணி இலங்கை வாழ் தமிழர். தர்ஜினி சிவலிங்கம் என்ற அந்த பெண்மணி மிகச் சிறந்த கூடைப்பந்து வீராங்கணையும் கூட. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ஆஸ்திரேலியா நாட்டிற்காக கூடைப்பந்து போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரையைச் சேர்ந்த தொழிலதிபரான பிரசாத் என்பவரை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அவர் குடும்பத்துடன் தென்திருப்பேரையில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் தான் இன்று ஆன்மீகத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக தென்திருப்பேரை தேரோட்டத்தில் பக்தர்களுடன் பக்தர்களாக கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தார்.


