தூத்துக்குடி பெருமாள்புரம் மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்து சுகாதாரக் கேடு நிலவுகிறது. இதனை சீரமைக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பெருமாள்புரம் மெயின் ரோட்டில் உள்ள கழிவுநீர் கால்வாய் கடந்த ஓராண்டுக்கு முன்பு செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி கால்வாயில் இறங்கியதால், கால்வாய் சுவர் சேதம் அடைந்துவிட்டது. சேதம் அடைந்து ஓராண்டுக்கும் மேலாகியும் இதனை சீரமைக்கவில்லை. இதனால் கழிவு நீர் தேங்கி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து நிலை ஏற்படுகிறது. இந்த பகுதியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குழந்தைகள் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. நூற்றுக் கணக்கான மாணவ, மாணவிகள் தினமும் இந்த சாலையை கடந்து செல்கின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு பலமுறை ஹெல்ப்லைன் மூலமாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். இது தொடர்பாக மேயர் நேரடியாக ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


