சாத்தான்குளம் அருகே வீடு மற்றும் கோயிலில் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள ராஜமன்னார்புரத்தில் அடையல் பெருமாள் சுவாமி கோவில் உள்ளது. இங்கு முதலூர் அடையலை சேர்ந்த ரவிச்சந்திரன் (55) என்பவர் நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கோவில் பூசாரி, பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றபோது இரும்பு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கோவில் நிர்வாகி ரவிச்சந்திரன் மற்றும் பக்தர்கள் சென்று பார்த்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், கோவில் இரும்பு கதவை உடைத்து கோவிலில் புகுந்து உண்டியல் பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். ஆனால் உண்டியலை உடைக்க முடியாததால் மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்றது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் தட்டார்மடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதேபோன்று சாத்தான்குளம் அருகே இடைச்சிவிளையை சேர்ந்த தில்லை மகாராஜன் என்பவரது வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்தது. தில்லை மகாராஜன் சென்னையில் வசித்து வருவதால், இடைச்சிவிளையில் உள்ள இவரது வீட்டை அதே பகுதியை சேர்ந்த ஜோரன் என்பவர் பராமரித்து வந்தார். சம்பவத்தன்று தில்லை மகராஜனின் வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ராஜமன்னார்புரம் கோவில் மற்றும் இடைச்சிவிளை தில்லை மகராஜன் வீடு ஆகிய இடங்களில் ஒரே நபரே கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக இட்டமொழி அருகே மனக்காவலபுரத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் ராஜேஷ் (33) என்பவரை கைது செய்தனர்.


