தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 100 டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட நகரும் பளுதூக்கி இயந்திரத்தின் சோதனை ஓட்டத்தை ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 76-வது குடியரசு தின விழா, துறைமுக பள்ளி மைதானத்தில் கொண்டாடப்பட்டது. வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், துறைமுகத் தீயணைப்புப் படை வீரர்கள், துறைமுகப் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அவர் தனது உரையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஜனவரி 26-ஆம் நாள் ஏற்றுக் கொள்ளப்பட்டதினிமித்தம் இந்தியக் குடியரசு தினம் பிறந்ததைப் பற்றி எடுத்துரைத்து ஜனவரி 26-ஆம் தினத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டினார். இந்தியாவை அதன் போராட்டங்களினிடையில் வழிநடத்திய தேசத் தலைவர்களின் தியாகத்தையும் அவர்களின் அக்கறையையும் பாராட்டிப் பேசினார். மேலும் அவர் தனது உரையில், தற்போது வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 14.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக வடக்கு சரக்கு தளம் 3-ஐ (Nஊடீ-3) ஆழப்படுத்தும் பணி பிப்ரவரி 2025 மாதம் முடிவடையும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தமிழக அரசினால் கடலோர பகுதிகளில் காற்றாலை நிலையங்களை அமைத்து காற்றாலை நிலையங்களின் மையமாக செயல்படுதற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரி பாகங்களை கையாளுவதற்கு வசதியாக இரு பிரத்தியேகமான முனையத்தை துறைமுகம் நிறுவி வருகிறது. இந்த முனையத்தின் மூலம் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியில் மொத்தமாக 20 ஜிகா வாட் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், இந்திய அரசு அளித்த தூண்டுதலின் மூலம், 5 டிரில்லியன் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும், தூத்துக்குடியைச் சுற்றி அமையவிருக்கும் பசுமை ஹைட்ரஜன் மையம், துறைமுகம் சார்ந்த தொழிற்சாலைகள், சூரிய மின் நிலையங்கள், கடல் காற்றாலை மையம், முன்மொழியப்பட்டுள்ள சென்னை – கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தில் வரவிருக்கும் தொழிற்சாலைகள் ஆகியவவற்றின் மூலம் இன்னும் 3 அல்லது 5 வருடங்களில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சுமார் 4 முதல் 5 மில்லியன் வுநுருள சரக்கு பெட்டகங்களைக் கையாண்டு பெரும் வளர்ச்சியைக் காண உள்ளது.
2022-2023-ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட துறைமுக உபயோகிப்பாளர்களான, கப்பல் மற்றும் முகவர்கள், ஸ்டிவிடோர், சுங்கதுறை முகவர்கள், சரக்குபெட்டகம் இயக்குபவர்கள், ஏற்றுமதியாளர்கள் இறக்குமதியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் துறைமுகத்தில் மிகச் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள். துறைமுக பள்ளிகளின் நடன நிகழ்ச்சிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பல்வேறு பாதுகாப்பு செயல்முறை விளக்கங்கள் செய்து காட்டினர்.
இந்த வரலாற்று நிகழ்வில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் கன்வேயர் மற்றும் துறைமுகத்தின் நிலக்கரி சேமிப்பு கிடங்கு வரை இணைக்கும் புதிய இணைப்பு கன்வேயர் அமைப்பின் சோதனை ஓட்டத்தை துவக்கி வைத்தார். மேலும் வடக்கு சரக்கு தளம்-2-ல் பயன்படுத்தப்படவிருக்கும் 100 டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட நகரும் பளுதூக்கி இயந்திரத்தின் (Harbour Mobile Cranes) சோதனை ஓட்டத்தை துவக்கி வைத்தார்.


