தூத்துக்குடி முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு. கி. செந்தில்ராஜ் அவர்களை சென்னையில் சந்தித்த பொன்னான தருணம்
சிப்காட், நிர்வாக இயக்குனர், டாக்டர் செந்தில் ராஜ் அவர்களை சந்திக்க சென்னை எக்மோரில் உள்ள சிப்காட் தலைமையகத்துக்கு சென்றோம். அய்யா அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த காலம் பொற்காலம். அப்போது தான் நான் தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்று இருந்தேன். எங்கள் முதல் சந்திப்பே விருது பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது தான். அதன் பிறகு தேர்தல் விழிப்புணர்வு படம் எடுக்கும் வாய்ப்புக்காக சந்திக்க நேர்ந்தது. அப்போதைய ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மூலமாக ஆட்சியரிடம் அந்த வாய்ப்பை பெற்று, எனது மகன் அபிஷ் விக்னேஷ் மூலமாக படங்களை இயக்கி கொடுத்தோம். தொடர்ந்து எங்களை ஆட்சியர் அலுவலகத்தில் பல பணிகளுக்கு பயன்படுத்திக்கொண்டார்கள். பயிற்சி கலெக்டர் சுருதன் ஜெய் நாரயன் (நடிகர் சின்னிஜெயந்த் அவர்களின் மகன்) மூலமாக அறியப்படாத தியாகிகள் தொகுக்க என்னை பயன்படுத்தினார்கள். தொடர்ந்து 27 தியாகிகளை ஆவணப்படுத்த சென்ற போது 300 தியாகிகளை கண்டு பிடித்து ஆவணப்படுத்தினேன். அதை மாவட்ட நிர்வாகம் சார்பாக “தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்” என்ற தலைப்பில் நூலாக உருவாக்கினார்கள். அந்த நூல்தான் தற்போதும் கூட தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் வி.ஐ.பிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இரண்டு புத்தக கண்காட்சியை நடத்தினார்கள். இரண்டாவது புத்தககண்காட்சியை சங்கரபேரியில் நடத்தும் போது ஆதிச்சநல்லூர்,சிவகளை, கொற்கை தொல்லியல் தளங்கள் மாதிரி கண்காட்சியையும் , புகைப்பட கண்காட்சியையும் நடத்தி புத்தக கண்காட்சியை கவனம் பெற வைத்தார்கள். தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் மற்றும் அருங்காட்சியம் அமைய மிகவும் உதவியாக இருந்தார்கள். மாதம் ஒரு முறை ஆதிச்சநல்லூர் வர தவறுவதே இல்லை. தூத்துக்குடி எம்.பி.கனிமொழி அம்மா அவர்களை அடிக்கடி அழைத்து வந்து தமிழரின் தொன்மையை உலகறிய செய்தார்கள். திட்டமிட்டபடி ஆதிச்சநல்லூருக்கு அருங்காட்சியகம் அமைக்க ஊர் மக்களிடம் இருந்து நிலங்களை பெற்று, அந்த இடத்தில் அடிக்கல் நாட்ட ஏற்பாடு செய்தார்கள். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கான அடிக்கல் இட்டார்கள். இதன் நினைவாக “தூத்துக்குடி மாவட்ட வரலாறு” என்ற நூலை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டேன். அதற்கும் வாழ்த்துரை கொடுத்து என்னை உற்சாகப்படுத்தினார்கள்.
தாமிரபரணியை சுத்தப்படுத்த வேண்டும், மரக்கன்று நடவேண்டும் என எங்களோடு பயணித்தார்கள். சுதந்திரபோராட்ட தியாகிகள் புகைப்படத்தினை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஏற்று அதற்கான நடவடிக்கையில் இறங்கினார்கள். இது போலவே பல திட்டங்கள் செயல்பட காரணமாக இருந்தார்கள்.
அவரின் வழிகாட்டுதலின் பெயரில் தற்போதும் பல பணிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். எனக்கு கலை பண்பாட்டு துறை மூலமாக “கலை நன்மணி” விருது வழங்கினார்கள். மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கும் இலக்கிய கலை இசை சங்கத்தில் என்னையும் சோ.தர்மன் அய்யாவையும் உறுப்பினர்களாக இணைத்தார்கள். இதுபோன்று பல்வேறு பணிகளைசெய்து வந்தவர் பணிமாறுதலாகி சென்னை சிப்காட் வந்து விட்டார்கள்.
அவரை பார்க்க வேண்டும் என்று காலையிலேயே எக்மோர் சென்று விட்டோம். எதிர்பாராத விதமாக தலைமை செயலகத்துக்கு அய்யா செல்ல வேண்டியதிருப்பதால் மாலை 6மணிக்கு எங்களை வரச்சொல்லிவிட்டார்கள். நாங்கள் புத்தக கண்காட்சி சென்று “செல்வங்களை அள்ளித்தரும் சித்தர் தரிசனம்” நூலைவெளியிட்டு விட்டு 6 மணிக்கு மீண்டும் வந்தோம்.
என்னுடன் சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்க தலைவர் சைமன், சிஷ்யன் காமராசு செல்வன் ஆகியோரும் வந்திருந்தனர். நாங்கள் வந்தவுடன் எங்களை அழைத்து வந்து தனி அறையில் அமர வைத்து, அவரது உதவியாளர்கள் மூலமாக டீ கொடுத்து உபசரித்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பரபரப்பாக வேலைபளுவுடன் இருப்பது போலவே, பல மடங்கு இங்கேயும் வேலையாகத்தான் இருந்தார்கள். ஆனாலும் எங்களை அழைத்து பேசினார்கள். நான் பொன்னாடை போர்த்தி எனது “ஆச்சி சொன்ன ஆத்தோரக் கதை”களை கொடுத்தேன். சைமன் சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்க காலண்டரை கொடுத்தார். அதில் உள்ள படத்தினை பார்த்து வியந்து பேசினார். அதன் பின் எங்களிடம் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், மழை வெள்ளம் உள்பட பல பிரச்சனைகளை பேசினார்கள். தாமிரபரணியை சுத்தப்படுத்து பணி பாதியிலேயே நிற்கிறது. எக்ஸ்னோரா வாடகை இல்லாத இயந்திரம் தந்திருக்கிறார்கள். மருதூர் அணையில் இருந்து ஆறாம்பண்ணை வரை ஓரளவு தாமிரபரணியை சுத்தம் செய்திருக்கிறோம். பலரிடம் உதவி கேட்டும், தற்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் அவர்களின் உதவி மூலம் இந்த பணி நடந்து முடிந்துள்ளது. மேலும் உதவி கிடைத்தால் மீதி தாமிரபரணியை சுத்தம் செய்யலாம் என்று கோரினோம். அதற்கு ஏற்பாடு செய்வதாக வாக்களித்தார்கள்.
மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தின் மீது அய்யா வைத்திருக்கும் பாசத்தினை என்னவென்று சொல்வது. தாமிபரணியை சாக்கடை கலக்காத நதியாக மாற்ற ராமையன் பட்டியில் தேக்கி வைத்திருக்கும் சாக்கடையை சுத்திகரித்து கங்கை கொண்டான் சிப்காட்க்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்ட வுடனே. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சிப்காட் மூலமாக சாக்கடை நீர் சுத்தகரிக்கும் திட்டம் குறித்து விவரித்தார்கள். அவரோடு பேசிக்கொண்டிருந்த அரை மணிநேரமும் தாமிரபரணியை காக்கும் பொன்னான தருணங்களாக அமைந்திருந்தது. நாங்கள் வெளியே வரும் போது மணி 7 ஆகி விட்டது. அதன் பிறகும் சுமார் 20க்கு மேற்பட்ட அலுவலர்கள் அய்யாவை சந்திக்க காத்திருந்தனர். இன்முகத்தினை அடுத்தவர்கள் வரவை அவர் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்.
அவரிடம் இருந்து விடைப்பெற்றுக்கொண்டு வெளியே வந்தோம். சைமன் கூறினார். இதுபோல அதிகாரிகள் இருக்கும் காரணத்தினால் தான் ஆதிச்சநல்லூர் புகழ் வெளியே தெரிந்துள்ளது. தாமிரபரணி காப்பாற்ற படப்போகிறது என்று கூறினார்.
உண்மைதானே. நாங்கள் மகிழ்ச்சியும் அடுத்து முக்கிய நபரை சந்திக்க கிளம்பினோம். -முத்தாலங்குறிச்சி காமராசு


