தூத்துக்குடியில் கனமழையின் போது கோரம்பள்ளம் குளம் பாதுகாக்கப்பட்டு, மக்களின் உடைமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளது என கனிமொழி எம்பி தெரிவித்தார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடியில் பெய்த மழையினால் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் சூசைப்பாண்டியாபுரம் பகுதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செங்குளம் ஓடை, மாவட்ட தொழில் மையம் அருகில் உள்ள செங்குளம் ஓடை, பாளையங்கோட்டை சாலையில் உள்ள இந்திய உணவுக் கழகம் வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீர், தூத்துக்குடி மாநகராட்சி ராஜீவ் நகர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீர், மழையினால் ஏற்பட்ட தண்ணீர் அனைத்தும் பக்கிள் ஓடை வழியாக கடலில் கலக்கும் இடமான திரேஸ்புரம் பகுதி, ஆத்தூர் பாலம், ஏரல் தரைப்பாலம் ஆகியவற்றை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று (15.12.24) பார்வையிட்டார்.
இந்த ஆய்வில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: விரைவில் மழை நீர் அப்புறப்படுத்தப்படும். தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பாதிப்பு உள்ள பகுதிகளை விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரபரணியில் அதிகம் தண்ணீர் வரக்கூடிய அபாயம் இருந்ததால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். ஏறத்தாழ 33 பாதுகாக்கப்பட்ட இடங்களிலே 1580 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதிய உணவு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் தொலைபேசி வாயிலாக மழை நிலவரம் குறித்து கேட்டு அறிந்து கொண்டிருக்கிறார்.
தற்போது மருதூர் அணைக்கட்டில் இருந்து வரக்கூடிய தண்ணீர் இப்போது 20 ஆயிரம் கன அடியாக குறைந்து இருக்கிறது. அதேபோல் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வெளியே செல்லும் தண்ணீர் 30,000 கனடியாக குறைந்து இருக்கிறது. மேலும், கோரம்பள்ளம் குளத்தில் தண்ணீர் அதிகமாக வரக்கூடிய நிலை ஏற்பட்ட போதும் அது பாதுகாப்பான அளவோடு நிறுத்தப்பட்டு அங்கிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு, கோரம்பள்ளம் குளம் பாதுகாக்கப்பட்டு, மக்களின் உடைமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் மிகப்பெரிய பாதிப்புகள் இல்லை என சொல்லக்கூடிய அளவில் மழையை எதிர்கொண்டு இருக்கிறோம் என தெரிவித்தார்.
ஆய்வின்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட கணிப்பாய்வு அலுவலர்/முதன்மைச் செயலாளர்/ ஆணையர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கோ.பிரகாஷ்,, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா (ஒட்டப்பிடாரம்), ஊர்வசி.செ.அமிர்தராஜ் (திருவைகுண்டம்), மேயர்பெ.ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன்,, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இ.ரா.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


