ஓட்டபிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வரும் இடத்தில் உள்ள கிராமங்களை பார்வையிட்டார். அவர் ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி உள்பட பல இடங்களுக்கு சென்றார். அவர் முத்தாலங்குறிச்சி சென்ற போது, முத்தாலங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் பொன்இசக்கி லெட்சுமணன் புகார் அளித்தார். அந்த புகாரில் முத்தாலங்குறிச்சி மக்களை காப்பாற்ற தாங்கள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறீர்கள். மிக்க நன்றி. ஆழிகுடி, முத்தாலங்குறிச்சியில் நேற்று இரவு முதல் மின்சாரம் இல்லை. ஆற்று வெள்ளத்தினால் பாதிக்கப்படும் இடங்களுக்கு செல்லும் மின் இணைப்புகளை துண்டித்து விட்டு மற்ற இடங்களுக்கு மின்சாரம் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். ஆழிகுடிக்கு நேற்று இரவே மின் இணைப்பு கொடுத்து விட்டார்கள். ஆனால் முத்தாலங்குறிச்சிக்கு இதுவரை மின்இணைப்பு கொடுக்க வில்லை. அதிகாரிகள் அரைமணி நேரத்தில் மின்சாரம் வந்து விடும் என்று கூறுகிறார்கள் . ஆனால் இதுவரை வரவில்லை. இதனால் குழந்தைகள்,பெண்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். முத்தாலங்குறிச்சியில் குடியிருப்புக்குள் ஆற்று வெள்ளம் செல்ல வில்லை. கரை வரையே வெள்ளம் செல்கிறது. எனவே தயவு கூர்ந்து மக்கள் பிரச்சனை தீர்க்க ஆழிகுடி கிராமத்துக்கு மின் இணைப்பு கொடுத்தது போலவே முத்தாலங்குறிச்சிக்கும் மின்இணைப்பு கொடுக்கவும். என்று கூறினார்.
சண்முகையா எம்.எல்.ஏ சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் பேசி முத்தாலங்குறிச்சிக்கு உடனடியாக மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்தார்கள். இதனால் முத்தாலங்குறிச்சி கிராம மக்கள் எம்.எல்.ஏ வுக்கு நன்றி கூறினார்கள். அவருடன் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, பஞ்சாயத்துதலைவர் பொன் இசக்கி லெட்சுமணன், இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார், தாசில்தார்கள் ரத்னசேகர், அய்யனார், வருவாய் ஆய்வாளர் மகராஜன், கிராம நிர்வாக அதிகாரி கந்த சுப்பு ஒன்றிய பொறியாளர் தளவாய், சேர்மத்துரை உள்பட பலர் உடன் வந்தனர்.


