சின்ன வயசுல ஊர்ல நடக்குற நிகழ்ச்சியா இருந்தாலும் சரி, திருவிழாவா இருந்தாலும் சரி, ஒரு மாசத்துக்கு முன்னால இருந்தே நாட்கள எண்ண ஆரம்பிச்சுவோம்.
அதுவும் பள்ளிக்கூடம் படிக்கிற வயசுல கேட்கவே வேண்டாம். ஊர்ல கோவில் கொடைன்னு வந்துட்டுன்னா பள்ளிக்கூடம் லீவு தான்.
ஆனா அரசாங்க விடுமுறை விடும்னு இருக்கிற தீபாவளி, பொங்கல் எல்லாம் அதவிட ஜாலி தான். ஏன்னா தீபாவளி பொங்கல் எல்லாமே அரசாங்க விடுமுறை. ஆனா, உள்ளூர்ல கோவில் கொடைன்னா லீவு எடுக்குற ரெண்டு நாளா இருந்தாலும் சரி மூணு நாளா இருந்தாலும் சரி அது வரைக்கும் பள்ளிக்கூடத்துல நடந்த பாடத்த எப்படி படிக்க, எப்படி எழுதன்னு மறுநாள் பள்ளிக்கூடம் போகும் போது மனசு படும் பாடு இருக்கு பாருங்க அத சொல்லவும் முடியாது. எந்த எழுத்தால எழுதவும் முடியாது.
இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பள்ளிக்கூடம் இருக்கிற நாள்ல ஒரு விழா வரும் பாருங்க அது தான் திருக்கார்த்தியல். இப்போ இருக்கிற காலத்துல எந்த நிகழ்ச்சியையும் பொறுமையா சந்தோஷமாக குடும்பத்தோடு கொண்டாட முடியாத நிலையில தான் நாம எல்லோருமே இருக்கோம்.
ஆனா அப்படி நான் சின்ன வயசுல ரொம்பவும் சந்தோஷசமா குடும்பத்தோடு கொண்டாடுன திருவிழாவுல ஒன்னுதான் இந்த திருக்கார்த்தியல்.
அத பத்தி தான் இதுல எழுதலான்னு நினைக்கேன்.
கார்த்திகை மாசம் பொறந்துட்டாலே போதும். திருக்கார்த்தியல் என்னைக்குன்னு காலண்டர பாக்க ஆரபிச்சிருவேன். பெரிய அளவுல இந்த திருக்கார்த்தியல பத்தி தெரியாத வயசு.
திருக்கார்த்தியல்லனா காலையிலேயே பச்சரிசியை தண்ணீல நனையபோட்டு சாயங்காலம் போல ரைஸ்மில்ல அரைச்சி ராத்திரி கொலுக்கட்டை புடிச்சி சாப்பிவோம். அவ்வளவு தான் தெரியும்.
இந்த நாள அவ்வளவு சந்தோஷமா எதிர்பார்த்துக்கிட்டு இருப்பேன்.
இதுக்காவ திருக்கார்த்தியலு அன்னைக்கு காலையிலேயே பள்ளிக்கூடம் போறதுக்கு முன்னால எந்திச்சி அப்பாக்கூட சைக்கிள்ல பனை குருத்து ஓலை வெட்ட கௌம்புவோம்.
அப்பா உடைமரம் வெட்டுற வேலை செஞ்சாங்க. எப்போதுமே அப்பாகிட்ட நல்லா தீட்டுன நீளமான வெட்டருவா இருக்கும். அத தூக்கி சைக்கிள் பின்னாடி இருக்குற கேரியர்ல இருந்து கீழ பாத்து தொங்க விடுவாங்க. என்னைய கேரியல்ல ஏத்தி வச்சிக்கிட்டு எங்க ஊருக்கு கீழ் பக்கம் இருக்குற விளங்காட்டுக்கு போவோம்.
அப்பாவுக்கு பனைமரம்லா அவ்வளவா ஏற தெரியாது. அதனால சின்ன பனைமரமா இருக்கும் பாருங்க. அத எங்க ஏரியா பக்கத்துல வடலின்னு சொல்லுவாங்க. அதுன்னா கீழ நின்னே மரத்துல இருக்குற குருத்தோலைய வெட்டிரலாம். அதுக்காவ இந்த வடலி இருக்குற இடமா பாத்து போவோம்.
அங்க ஒரு ஓரமாக வண்டிய விட்டுட்டு எங்க அப்பா பின்னாலயே சைக்கிள்ல தொங்க போட்ட வெட்டருவாவ எடுத்து போவேன்.
கொஞ்ச தூரம் போனதும் அப்பா உடைமரம் வெட்ட போகும்போது இடுப்புல உள்ள அர்ணா கயிறுல அருவாவ போடுற மாதிரி நானும் போட்டுட்டு பின்னாலயே நடப்பேன். அப்போ அருவா கால்ல தட்டிக்கிட்டே கிடக்கும். அத பாத்ததும் அப்பா ஏல அருவால கையில எடுத்து வச்சிக்க, கால்ல வெட்டிற போவுதுன்னு திட்டுவாங்க. உடனே அருவாள எடுத்து கையில வச்சிகிட்டு நடப்பேன். அப்பானாலே பயம். பாட்டின்னா ரொம்ப பயம்.
கொஞ்ச தூரத்துல ஏதாவது ஒரு வடலிய பாத்து குருத்தோல வெட்ட ஆரம்பிப்பாவ. அப்பா வெட்டி போடுற குருத்தோலையை ஒன்னு ஒன்னா கையில எடுத்து கொண்டுட்டு அப்பா பின்னாலயே போவேன்.
ஒன்னு ரெண்ணு குருத்தோலை இருந்தா ஒரு சின்ன குடும்பத்துக்கு போதும். ஆனா எங்க குடும்பம் ரொம்ப பெருசு. எங்க அம்மா, அப்பா, பாட்டி, நான், என்னோட 4 தங்கச்சி, ஒரு தம்பின்னு பெரிய குடும்பம்.
அதனால கூட ரெண்டு மூணு குருத்தோலை வெட்டிட்டு போவோம். அது மட்டுமில்லாம பக்கத்து வீட்டுக்காரங்க கேட்டா அவங்களுக்கு இல்லன்னு சொல்ல முடியாது. பக்கத்து வீடு எல்லாமே சொந்தக்காரங்க. குருத்தோலை வெட்டிட்டு போகும்போது அதா பாத்து அவங்க கேட்டு நம்ம இல்லன்னு சொன்னா மூஞ்சு ஒருபக்கமா போயிரும். அதனால அப்பா யாரு கேட்டாலும் வீட்டுக்கு இருக்குறது போக மீதி இருந்தா கொடுத்துவாங்க.
ஒரு வழியா அங்க இங்க போயி ஓலை வெட்டிட்டு எல்லா குருத்தோலையும் அள்ளிக்கிட்டு சைக்கிள் பின்னாடி இருக்குற கேரியல்ல கெட்டுவாங்க. அப்புறம் நாங்க எங்க போயி உட்கார. சைக்கிள் முன்னாடி இருக்குற பார் கம்பியில உட்கார வச்சிட்டு கொஞ்ச தூரத்துக்கு மண் தரையாத்தான் இருக்கும். அந்த இடத்துலயும் என்னைய முன்னாடி வச்சிக்கிட்டு அழுத்திட்டு போவங்க. அதுக்கு அப்புறம் தான் தார்ரோடு வரும்.
ஒரு வழியாக வீடு வந்து சேர மணி காலையில 9 ஆயிரும். சரி இன்னைக்கு பள்ளிக்கூடத்த லீவு போட்டுறலான்னு பிளான் பண்ற நேரத்துக்குள்ள எங்க அப்பா, ஏல நேரம் ஆச்சி போயி சீக்கிரம் குளிச்சிட்டு சாப்பிட்டு பள்ளிக்கூடத்த பாக்க போன்னு வெறட்டுவாங்க.
அறக்கப்பறக்க குளிச்சிட்டு சாப்பிட்டு பள்ளிக்கூடத்த பாக்க போவேன். அப்பாவும் வெட்டிட்டு வந்த ஓலை எல்லாம் வீட்டுல வச்சிட்டு உடை வெட்டுற வேலைக்கு கிளம்பிருவாங்க.
மீதி இருக்குற வேலை எல்லாம் அம்மாவும் பாட்டியும் பாத்துக்கிடுவாங்க.
பள்ளிக்கூடம் போனாலும் நினைப்பு எல்லாமே வீட்டுல தான் இருக்கும். பள்ளிக்கூடம் இன்னைக்காவது மத்தியானம் விடுவாங்களான்னு கூட இருக்குற நண்பர்கள் கிட்ட கேட்ட காலம் எல்லாம் உண்டு.
நான் பள்ளிக்கூடத்துக்கு கிளம்பி வந்ததும், அம்மா பக்கத்துல இருக்கிற கடையில போயி பச்சரிசி வாங்கிட்டு வந்து நனைய போடுவாங்க. நான் பள்ளிக்கூடம் விட்டு போறதுக்குள்ள அம்மா ரைஸ்மில்லுக்கு போயி மாவ இடிச்சிட்டு வந்து வச்சிருப்பாங்க. சில வருஷம் சனி ஞாயித்துக்கிழமை நாள்ள இந்த திருக்கார்த்தியல் வந்துச்சின்னா அம்மா கூட நானும் ரைஸ் மில் போவேன். திருக்கார்த்தியல் நாள்ல லீவு வந்துட்டா கூட விளையாட போக மாட்டேன்.
அரிசி நனைய போட்ட நேரத்துல இருந்து அரிசி எங்கெல்லாம் போவுதோ அங்க நானும் போவேன்.
சில நேரம் நனைய போட்ட அரிசியை எடுத்து வாயில போட்டுட்டு வெளியே போவேன். அதா எங்க பாட்டி பாத்துட்டா போதும். வேற வினையே வேண்டாம்.
கையில ஒரு பனை மட்ட வச்சிருக்கும் அதை வச்சி ஒன்னு பொத்துன்னு விழும். வாயில இருந்த அரிசி அப்படியே கீழ விழும். அழுதுகிட்டே வெளியே ஓடிருவேன். எங்க அம்மா எதுக்கு பையன அடிச்சியன்னு கேட்கும். மாவு இடிச்சி ராத்திரி கொழுக்கட்டை செஞ்சி சாமிக்கு கும்புட்டுட்டுத்தான் சாப்பிடனும். இவன் என்னன்னா இப்பவே எச்சாக்குதான்னு திட்டும்.
எங்க அம்மாவும் பேசமாக கண்ண கசக்கிட்டே வீட்டுக்குள்ள போயிருவாங்க. இதெல்லாம் நடந்துருக்கு.
ஒரு வழியாக சாயங்காலம் ஆகும். பள்ளிகூடம் முடிஞ்சி வேகம் வேகமாக வீட்டுக்கு ஓடி வருவேன்.
அம்மா ரைஸ்மில் போயிட்டு இடிச்சி வச்ச மாவு எங்கன்னு தேடுவேன். ஒரு பிளாஸ்டிக் வாளியில மாவு இடிச்சி வச்சிருப்பாங்க. அது பக்கத்துலயே ஒரு பிளாஸ்டிக் கவர்ல மண்டவெல்லம், சுக்கு, பொறிகடலைன்னு கொழுக்கட்டையில போடுற சில விஷயங்கள் அது பக்கத்துலயே இருக்கும்.
அம்மா பக்கத்துல போயி எம்மா எப்போம்மா கொழுக்கட்டை செய்யனும்னு கேப்பேன். நீ போயி விளையாண்டுட்டு வா நாம ராத்திரி 7 மணிக்கு மேல செய்வோன்னு சொல்லி அனுப்பி வைப்பாங்க. நானும் வேண்டா வெறுப்பா ஊரு கோயில் பக்கத்துல போயி கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடிட்டு வருவேன். எனக்கு கிரிக்கெட் விளையாடுறது ரொம்ப புடிக்கும். ஆனா எங்க பாட்டிய பாத்தாலே ஊர்ல என்னைய யாரும் விளையாட்டுக்கு சேக்க மாட்டாங்க. அதுக்கும் ஒரு வரலாறு இருக்கு.
நேரம் போயிகிட்டே இருக்கும். சாயங்காலம் இருட்டவும் வீட்டுக்கு வந்து சேருவேன். அப்பாவும் வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வந்துப்பாவ.
அம்மா காலையிலேயே வீட்டு கதவ எல்லாம் கழுவி வச்சிருப்பாங்க.
இந்த திருக்கார்த்தியலுக்கு வீட்டு கதவ கழுவி அதுக்கு சந்தனம் குங்குமம் எல்லாம் வச்சி அலங்காரம் செய்வாங்க.
கதவ அலங்காரம் செய்ய நான் சின்னப்பிள்ளையா இருக்கும்போது இருந்த ஒரு அலங்கார ஆயுதம் என்னன்னு தெரியுமா? பப்பாளி மரத்தோட இலை தான். இலைய எல்லாம் பிச்சி போட்டுட்டு அதோட காம்ப மட்டும் நட்சத்திரம் மாதிரி மஞ்சல்ல முக்கி அச்சி வைப்போம்.
அதுமட்டும் கிடையாது. கையை அப்படியே கலக்கி வச்சிருக்க மஞ்சள்குள்ள விட்டு அப்படியே கையோட தடத்த கதவுல பதிப்போம். அது அடுத்த வருஷம் வரை அந்த கதவுல இருக்கும்.
அதுக்கும் சண்ட தான். நான் ஒரு பக்கம் வச்சிக்கிட்டு இருப்பேன். என்னோட தங்கச்சிங்க நாங்களும் வைப்போமுன்னு ஆளாளாக்கு அழ ஆரம்பிச்சிருவாங்க.
உடனே எங்க பாட்டி அந்த பனை மட்டைய எடுக்கும். அதுக்குள்ள எங்க அம்மா வந்து ஒருத்தரு மஞ்சள முக்கி வைங்க. இன்னொருத்தரு அதுக்குமேல சந்தனம் வைங்க. இன்னொருத்தரு குங்குமம் வைங்கன்னு அம்மா சொல்லுவாங்க. அப்புறம் அதா கேட்டுக்கிட்டு ஆளுக்கொரு வேலையா பாப்போம்.
இதுக்கு இடையில ஊர்ல உள்ள நண்பர்களோட வெளியே போயி திருக்கார்த்தியல் நாள்ல சைக்கிள் டயரை கொளுத்தி ஊர் முழுசும் சுத்தி வருவோம்.
அந்த டயருக்காக பள்ளிக்கூடம் போயிட்டு வர்ற வழியில இருக்கிற சைக்கிள் கடையில ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு பழைய டயரை வாங்கிட்டு வருவோம். அதுவும் அந்த கடைக்காரர் நினைச்சா தான் நமக்கு தருவார். அந்த டயர் கிடைக்கிற சந்தோஷம் இருக்கு பாருங்க அது சொல்லவே முடியாது.
சில வருடங்கள் ராத்திரி நேரத்துல இந்த டயரை கொளுத்திக்கிட்டு ஊர் சுத்த போவோம். அப்படி டயரை கொளுத்தி விளையாடும் போது கையில கால்ல பட்டுச்சின்னா பொத்து போயிரும். அப்படி நிறைய முறை கை கால்ல பொத்துருக்கு. அதுக்காக பாட்டிக்கிட்ட மட்டையால அடி வாங்கின நாட்களும் உண்டு.
சரி கொழுக்கட்டை செய்யிற கதைக்கு வருவோம்.
பாட்டி ரைஸ்மில்ல திரிச்சிட்டு வந்த அரிசி மாவ எடுத்து வீட்டுல இருக்குற சொலவுல தட்டுவா. அத பாத்ததும் ஆசையில பக்கத்துல போயி உட்காருவோம்.
மாவ ஏற்கனவே சாயங்காலம் போல லேசா பொறிக்கான் சட்டியில போட்டு வறுத்து வச்சிருப்பா. அப்பத்தா மாவு கெட்டு போவாதாம். இல்லன்னா ஈரத்துல மாவு வாடை அடிக்க ஆரம்பிச்சிரும். கூட ரெண்டு மூணு நாளு வச்சி ஏதுவும் செய்ய முடியாம போயிரும்.
எங்க வீட்டுல திருக்கார்த்தியல் அன்னைக்கு கொஞ்சம் கொழுக்கட்டை செஞ்சிட்டு அப்புறம் இன்னொரு நாள் இனிப்பு போடாம உப்பு போட்டு கைய வச்சி புடிச்சி இட்லி சட்டியில வைச்சி செய்யிற கைக்கொழுக்கட்ட அவிச்சி தருவாங்க. அதுவும் ரொம்ப நல்லா இருக்கும்.
கொழுக்கட்டை எப்படி செய்யிறாங்கன்னு பாக்குரதுக்காகவே பாட்டி பக்கத்துல போயி சுத்தி உட்காருவோம்.
கொழுக்கட்ட செய்யிறதுக்காக மாவ சொலவுல தட்டி வச்சிருப்பாங்க.
அம்மா அடுப்புல மாவுல ஊத்தி பினையிறதுக்காகவே மண்டவெல்லத்த நல்லா காச்சி கொண்டு வருவாங்க.
கொஞ்சம் சூடு ஆற ஆரம்பிச்சதும், மெல்ல ஒரு கரண்டியில கொஞ்சம் கொஞ்சமா இந்த மண்டவெல்ல பாவ ஊத்தி பினைவாங்க. ரொம்ப தண்ணீயா ஆயிட்டாலும் அடுப்புல வைச்சி அவிக்க முடியாது. மாவு எல்லாம் பனை ஓலையை விட்டு வெளிய ஓடி வந்துரும். ரொம்ப கட்டியா இருந்தாலும் மாவு வேவாது. அதுக்குன்னு உள்ள பக்குவத்த பாத்து பாத்து பாட்டி மெதுவா செய்வாங்க.
பாட்டி பக்கத்துல உட்கார இன்னொரு காரணமும் உண்டு. பிசையும் போது ஏதும் மாவு கீழே விழுந்தா எடுத்து தின்னுக்கலான்னு ஒரு ஆசை. அதுவும் சில நேரம் நடக்கும். பாட்டி மாவ நல்லா சொலவுல வச்சி அடிப்பாங்க. அப்பாத்தான் கொழுக்கட்டை நல்லா இருக்குன்னு. அந்த நேரத்துல சில துண்டு கீழே விழும். அத போட்டி போட்டு எடுத்து வாயில வைப்போம். வாயிலயே அடி விழும். மாவ கீழ துப்பிட்டு ஒரு ஓரமா போயி உட்காந்து அழுவேன். அதுவும் நடந்துருக்கு. இந்த அடி என்னோட தங்கச்சி தம்பி எல்லாத்துக்கும் விழுந்துருக்கு.
அப்பா ஒரு புறம் காலையில வெட்டிட்டு வந்த பனை குறுத்தோலைய சரியான அளவுல வேலைக்கு கொண்டு போற அரிவாள வைச்சி வெட்டிக்கிட்டு இருப்பாங்க. அவங்க பக்கத்துல போயி உட்காருவோம்.
அப்பா வெட்டி போடுற ஓலையை அடுக்கா எடுத்து வைப்போம். அப்போ எல கையில அருவா பட்டற போவுதுன்னு அப்பா கண்டிப்பாவ. ஆனா அது எதுவும் காதுல வாங்குனதே கிடையாது.
மாவ கொன்னு, அதுல சுக்கு, வேர்க்கடலை, கடலை, எள்ளு, தேங்காய துருவி போடுவாங்க. சில வீட்டுல தேங்காய் போட மாட்டாங்க. தேங்கா போட்டா மறுநாள் கெட்டு போயிரும். எங்க வீட்டுல தேங்காய் போட்டது கிடையாது.
மாவ நல்லா பினைஞ்சதுக்கு அப்புறம் அதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா எடுத்து அப்பா வெட்டி வச்சிருந்த ஓலைக்கு இடையில அளவு பாத்து பாட்டி வைப்பாவ.
அப்பாவும் அம்மாவும் வெட்டிப்போட ஓலை போக மீதி இருக்குற ஓலை இலைய கயிறு மாதிரி கிழிச்சி பாட்டி வைச்ச கொழுக்கட்டை செஞ்சி வைச்சிருக்கிறதுக்கு மேல ஒரு ஓலை வச்சி அதுக்கு மேல சுத்தி கட்டுவாங்க. அப்போத்தான் கொழுக்கட்டைக்குள்ள அவிக்கும்போது தண்ணீ போவாது.
பாட்டிக்கு இனிப்பு அதிகமா புடிக்காது. அதனாலயே பாட்டி மறுநாள் இட்லி சட்டியில உப்பு கொழுக்கட்டை செய்யிறதுக்குன்னு தனியாக மாவ எடுத்து வச்சிரும்.
இதெ எல்லாம் பாத்துக்கிட்டே இருப்போம்.
ஒரு வழியாக 9, 10 மணிக்கெல்லாம் பாட்டி மாவ பினையிற வேலைய முடிச்சிருப்பாவ. அதுக்கு அப்புறம் வீட்டுல இருக்குற ஒரு பெரிய பானைய அம்மா எடுத்துட்டு வருவாங்க. அதுக்குள்ள கழிச்சி போட்ட ஓலை எல்லாத்தையும் உள்ள அள்ளி வச்சி அதுல தண்ணீ ஊத்துவாங்க. அதுக்கு மேல செஞ்சி வச்ச கொழுக்கட்டைய அடுக்குவாங்க. அப்போத்தான் கொழுக்கட்டை வெண்ணீயில நனையாம இருக்குமாம். கொழுக்கட்டைய அடுக்கி வச்சதுக்கு அப்புறம் அதுக்கும் மேலயும் நிறைய ஓலையை அள்ளிப்போட்ட பெரிய மூடிய எடுத்து மூடுவாங்க.
மூடிக்கு மேல ரெண்டு செங்கல தூக்கி வைப்பாங்க. அப்பத்தான் சூடு வெளிய போகாம சீக்கிரம் கொழுக்கட்டை வேகுமாம்.
அது எப்போ வேகும் என்று தூங்காமல் முழித்திருந்த நாட்கள் எல்லாம் பல. நான் எப்பவுமே பாட்டி பக்கத்துல தான் படுத்துக்கிடப்பேன். நான் தூங்காமல் உருண்டு புறண்டு வருவதை பார்த்து ஏல பேசாம தூங்கு. நீ எவ்வளவு நேரம் முழிச்சிருந்தாலும் இன்னைக்கு ராத்திரி கொழுக்கட்டை கிடையாது என்று பாட்டி கூறுவாள்.
இருந்தாலும் மனம் கேட்காது. கொழுக்கட்டையும், அதோடு வைத்திருக்கும் பனை ஓலையும் வேகும் போது வரும் மனம் எதற்கும் ஈடாகாது.
சில நாட்கள் கொழுக்கட்டை வேகம் வாசத்தை மட்டும் அனுபவித்து விட்டு இரவு தூங்கிய காலங்கள் உண்டு. சில நாட்கள் இரவு நேரத்தில் கொழுக்கட்டை வெந்ததும், அதில் இருந்து சிலவற்றை மட்டும் எடுத்து வைத்து சாமி கும்பிட்டு விட்டு அதில் ஒன்றை மட்டும் எடுத்து எங்கள் அனைவருக்கும் பாட்டி பிரித்து கொடுப்பார்.
பாட்டி ஆளுக்கு ஒன்னாவது கொடு என்று கேட்போம். தரமாட்டாள். இரவு சாப்பிட்டாள் காலையில் வயித்தால போயிரும் என்று பயமுறுத்துவாள்.
சரி என்று இரவு சூடோடு சாப்பிட்டு விட்டு படுத்து உறங்கியுள்ளோம்.
காலையில் எழுந்ததும் பானை அருகே தான் சுற்றியிருப்போம்.
பாட்டி இருக்கும் வரை எங்கள் வீட்டில் பாட்டி ராஜாங்கம் தான். அம்மாவும் அப்பாவும் பாட்டி சொல்வதற்கு மறு பேச்சே கிடையாது.
எல்லாரும் பல் துலக்கி விட்டு கொழுக்கட்டைக்காக தயாராக இருப்போம்.
பாட்டி அருகே பானையை தூக்கி வைத்துக் கொள்வாள்.
அதன் அருகே சொலவையும் வைத்துக் கொள்வாள்.
பானைக்குள் இருந்து ஒவ்வொரு கொழுக்கட்டையாக எடுத்து அதில் இருந்து ஓலையை மெதுவாக பிரித்து எடுப்பாள். அருகே அமர்ந்து அவசரத்தில் எடுத்துப் போட்ட ஓலையை இரண்டாக கிழித்துக் கொண்டே இருப்போம்.
இரண்டாக ஓலையை கிழிக்க விட மாட்டாள். அதற்கான காரணமும் பின்னால் தெரிந்தது.
நாங்கள் இருந்த வீடு ஓடு போட்ட வீடு. இரண்டு ஓடுகளுக்கு இடையே மழை நேரங்களில் சில இடங்களில் ஒழுகும். அந்த இடத்தில் இந்த ஓலையை இரண்டாக விரித்து சொருகி வைப்பாள். அந்த இடம் அதன்பின் ஒழுகாது. அப்படி எங்கள் ஓட்டு வீட்டில் பல இடங்களில் இந்த பனை ஓலைகள் வருடம் முழுவதும் இருந்துள்ளது.
அதற்கு பிறகு பிரித்த கொழுக்கட்டைகளை ஆளுக்கு ஒன்று இரண்டு மட்டும் தான் கொடுப்பாள்.
மற்றவைகளை பத்திரமாக சொலவில் ஒன்றொரு ஒன்று ஒட்டாமல் பிரித்து வைப்பாள். கொழுக்கட்டை ஒன்றொரு ஒன்று ஒட்டினால் நூல் பிடித்தது போல் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும்.
இதை இரண்டு வார காலத்திற்கும் மேல் காயவைத்து நாங்கள் எங்கள் வீட்டில் ஆளுக்கொன்று என்று பிரித்து வைத்து சாப்பிட்ட காலங்களும் உண்டு. அதற்காக தினமும் காலையில் ஒன்று மாலையில் ஒன்று இரண்டு மட்டும் தான். அதன்பின் அந்த சொலவில் வைத்து எங்களுக்கு எட்டாத இடத்தில் மேலே வைத்து விடுவாள் எங்கள் பாட்டி.
அதே போல் சில நாள் பாட்டிக்கு தெரியாமல் ஒன்று இரண்டை பள்ளிக்கூடம் செல்லும் பையில் வைத்து திருடிக்கொண்டு பள்ளி நண்பர்களுக்கு கொடுத்து அவர்கள் கொடுத்ததை வாங்கி உண்ட நாட்களும் உண்டு.
திருக்கார்த்தியல் மறுநாள் எங்கள் பகுதியில் உள்ள காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் சிலர் இந்த கொழுக்கட்டையை வாங்க வருவார்கள். அவர்களுக்கும் ஒன்று இரண்டு எங்கள் பாட்டி கொடுப்பாள்.
காலங்கள் சென்றது. பல வருடங்களுக்கு முன்பு பாட்டி நோய்வாய் பட்டு இறந்து விட அந்த வேலையை எனது தந்தை செய்தார்.
பாட்டியை போல சொலவில் மாவை தட்டி மிகவும் நேர்த்தியாக செய்வார். அப்பா செய்யும் போதே என்ன இருந்தாலும் என்னோட அம்மா செய்வது போல கொழுக்கட்டை வராது என்று அம்மாவை நினைத்துக் கொள்வார்.
அப்போதும் நாங்கள் அப்பாவை சுற்றி அமர்ந்து இருப்போம். ஆனால் அப்பா பாட்டியை போல அடிக்க மாட்டார். ஆளுக்கொரு உருண்டை சிறிது சிறிதாக உருட்டி கொடுப்பார். நாங்கள் அதை வாங்கி விட்டு அருகே இருக்கும் டிவியை பார்த்துக் கொண்டிருப்போம்.
அடுத்த சில ஆண்டுகளில் அப்பாவும் இறந்து விட அம்மா எங்களை அரவணைத்துக் கொண்டார்.
அப்பா இறந்த போது எனக்கு மட்டும் தான் 17 வயது மற்ற தங்கை தம்பி எல்லாம் நான் பிறந்த பிறகு 5 ஆண்டுகள் கழித்து பிறந்தவர்கள். அதனால் அனைவரும் சின்ன சின்ன பிள்ளைகள் தான்.
அந்த சூழலிலும் எங்களை எங்கள் அம்மா மிகவும் கட்டுப்பாடுடனும் அன்பாகவும் வளர்த்தார்.
பாட்டியும், அப்பாவும் திருக்கார்த்தியல் நாட்களில் செய்ததை போல எனது அம்மாவும் எங்களை அருகே அமர வைத்து உதவ வைத்து கொழுக்கட்டை செய்து தருவார்.
காலங்கள் புரிய தொடங்கிய பிறகு அம்மாவுடன் அருகே அமர்ந்து நான் கொழுக்கட்டையை செய்ய ஆரம்பித்தோம். அந்த சமயங்களில் பாட்டி மற்றும் அப்பாவின் நினைவுகள் வந்து கண்ணீர் விட்ட காலங்கள் எல்லாம் உண்டு.
இந்த நினைவுகள் அனைத்தும் தற்போதும் எனக்குள் புதைந்து கிடக்கிறது. நினைக்கும் போதெல்லாம் அந்த நினைவுகள் வந்து என் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.
இப்போதும் இதுபோல் கொழுக்கட்டையை திருக்கார்த்தியல் நாளில் செய்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் மூன்று தங்கைகள் திருமணமாகி அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டார்கள். நான் பணி நிமித்தம் காரணமாக வெளியூர் சென்று விட்டேன். ஆனால் இந்த வருடம் மீண்டும் ஊருக்குள் அம்மா அருகே தான் இருக்கிறேன். நிச்சயம் இந்த ஆண்டு அம்மாவோடு நான் எனது மனைவி குழந்தைகளுடன் திருக்கார்த்தியல் கொண்டாடுவோம்.
எங்கள் பாட்டி எங்கள் பாட்டி என்று கூறுகிறேனே எங்கள் பாட்டி பெயர் என்ன என்று தானே கேட்கிறீர்கள் என்னோட பாட்டி பெயர் #சீதாலெட்சுமி.
எங்களை சிறுவயதில் மிகவும் பக்குவமாகவும் பாதுகாப்பாவும் கட்டுக்கோப்பாகவும் வளர்த்ததில் எனது தாய் தந்தையை விட முக்கிய பங்கு வகித்தவர். எனது பாட்டி சீதாலெட்சுமி. எனது கடைசி தங்கையை தவி எங்கள் குடும்பத்தில் உள்ள மற்ற அனைவருக்கும் எனது பாட்டியை நன்றாகவே தெரிந்திருக்கும்.
எனது தாய் #சேர்மக்கனி தந்தை #பேச்சிமுத்து.
இந்த படத்தில் இருப்பவர் தான் எனது பாட்டி சீதாலெட்சுமி. அவர் அருகே இருப்பது என்னுடைய தாயும் தந்தையும்.
தப்பு செய்தால் கையில் பனை மட்டை வைத்திருப்பார் எங்கள் பாட்டி. அதை வைத்து வெளுத்து எடுத்து விடுவார்.
அவர் கையில் வைத்திருக்கும் பனை மட்டைக்கும் ஒரு வரலாறு உண்டு. வருடத்திற்கு ஒரு முறை அந்த பனை மட்டையும் மாறும். அந்த பனை மட்டை வரலாற்றை நான் இன்னொரு முறை நிச்சயம் எழுதுகிறேன்.


