வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் தாமிரபரணி ஆற்றில் அதிக அளவிலான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் 40 ஆயிரம் கன அடி நீர் வரை வந்து கொண்டிருக்கிறது.
இதனால் தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. மேலும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 10 ஆயிரம் கன அடி நீர் தற்போது வரை வெளியே செல்கிறது.
இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் மாநில அரசு சார்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாநில அரசு சார்பில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆதிச்சநல்லூர் தகவல் மையம் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.
இந்த தகவல் மையத்திற்குள் மாநில அரசு சார்பில் நடந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சில முதுமக்கள் தாழிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த முதுமுக்கள் தாழிகள் அனைத்தும் மாநில அரசு சார்பில் திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகம் அமைந்தவுடன் அங்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
தற்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அந்த ஆதிச்சநல்லூர் தகவல் மையத்தை சூழ்ந்து வெள்ள நீர் செல்கிறது.
அதே போல் கடந்த வருடம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்தது. அந்த அகழாய்வு குழிகளும் பராமரிக்கப்படாமல் உள்ளது. அதிலும் இரண்டு நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
எனவே இந்த மழை வெள்ளத்தின் போது தொல்லியல் தளங்களை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


