தமிழ் பாப்திஸ்து துவக்கப் பள்ளியில் நடந்த பாரதியார் பிறந்த நாள் விழாவில், குழந்தைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி இளம் பாரதிகள் உறுதி மொழி ஏற்றனர்.
நாட்டின் விடுதலைக்காக தனது புரட்சி எழுத்துக்கள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய எட்டயபுரத்து முண்டாசு கவிஞன் மகாகவி பாரதியின் 143 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளியில் நடந்த விழாவில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாரதியின் வேடம் புணைந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பாரதியின் பாடல்களை பாடி வந்தேமாதரம் கோஷமிட்டு பள்ளி முன்பிருந்து துவங்கி மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.
முன்னதாக “14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி கிடைப்பதை உறுதி செய்திடவும், குழந்தைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்திடவும், குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி, பாதுகாப்பிற்கு பாடுபடவும், உறுதிமொழி எடுத்துக் கொண்டனர், பல்வேறு கலை இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இராஜையா தலைமை வகித்தார்,
கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், இனாம்மணியாச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பள்ளி ஆசிரியை ஜெயராணி அனைவரையும் வரவேற்றார், பொன்னுஸ் நேச்சுரல் நிறுவன உரிமையாளர் பொன்னுச்சாமி பரஞ்ஜோதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி இளம் பாரதிகளின் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜீ, ஊர் பிரமுகர் ராமசாமி, இன்ஜீனியர் ஜானு, பில்டிங் காண்ட்ராக்டர் கணேசன் உள்பட மாணவர்கள் பெற்றோர்கள், சத்துணவு பணியாளர்கள், பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளி மாணவர் இன்பராஜ் நன்றி கூறினார்.


