விளாத்திகுளம் அருகே பயிர்க்காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர் மற்றும் எட்டையபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு பல ஆயிரம் ஏக்கரில் பயிரிட்ட தோட்டக்கலை பயிர்களான வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களுக்கு தற்போது வரை 2023-2024 ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என்றும், புதூர் வட்டாரத்தில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும், அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லாத காரணத்தால் இன்று புதூர் பேருந்து நிலையம் முன்பு ஏராளமான விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி சற்று பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் விளாத்திகுளம் வட்டாட்சியர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அதனை ஏற்க மறுத்து விவசாயிகள் தொடர்ந்து விளாத்திகுளம் – மதுரை செல்லும் சாலையில் அமர்ந்து பயிரக்காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் புதூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்ற டிசம்பர் 20-ம் தேதிக்குள்ளாகி 2023-2024-ம் ஆண்டுகளுக்கான பயிர்க்காப்பீட்டுத் தொகை விடுவிக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர். மேலும், டிசம்பர் 20-ம் தேதிக்குள் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என்றால் டிராக்டர்களுடன் வந்து சாலையை மறித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தவுள்ளோம் என்று விவசாயிகள் தெரிவித்துச் சென்றனர்.


