தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 42வது வார்டுக்குட்பட்ட சண்முகபுரம் ரினோன் திருமண மண்டபம் மற்றும் மாநகராட்சி திருமண மண்டபம் ஆகிய பகுதியில் பகுதி சபா கூட்டம் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டூராஜா வரவேற்புரை ஆற்றினார். நிதி, பொது குழு உறுப்பினர் கோட்டு ராஜா முன்னிலை வைத்தார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது 42 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் மற்றும் ரோடுகள் வசதி குடிதண்ணீர் வசதிகள் செய்து தரும்படி அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். மேலும் முதியோர் உதவி தொகை கேட்டு 3 பேர் மனு கொடுத்தனர்
மனுக்களை பெற்ற மேயர் என்.பி ஜெகன் பெரியசாமி பேசியதாவது “தமிழக முதல்வர் உத்தரவுப்படி ஆண்டுக்கு 4 பகுதி சபா கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி 4வது கூட்டம் 42 வது வார்டு பகுதியில் நடைபெறுகிறது. இந்த வார்டில் 3 வார்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் ரோடு வசதிகள் கழிவுநீர் கால்வாய் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கால்வாய் வசதி செய்யப்பட வேண்டும்.
மேலும் பிரதான சாலைகள் போடப்பட்டு விட்டன. இன்னும் 3 ரோடுகள் போட வேண்டும். தற்போது குடி தண்ணீர் குழாய்களில் கழிவு நீர் கலந்து வருவதாக வந்த புகாரின் பேரில் அருகில் உள்ள 41 வது வார்டில் குழாய்கள் மாற்றப்பட்டு கருப்பு குழாய்கள் பதிக்கப்பட்டு விட்டன. 42 வது வார்டு முழுவதும் கருப்பு குழாய் பதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிதண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் தினசரி தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் தினசரி குடிதண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி சபா உறுப்பினர்கள் செல்வராஜ், பொன்ராஜ், ஜெபக்குமார் ரவி, கருணாஸ், பாலசுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையரின் உதவியாளர் துரைமணி, மேயரின் உதவியாளர் ஜெஸ்பர், திமுக நிர்வாகிகள் செல்வராஜ், மூக்கையா, உத்திரபாண்டி, ஜெபஸ்டின், தேவகுமாரன், பொன்ராஜ், கணேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


