ரயில்வே சுரங்க பாதையால் துண்டிக்கப்பட்ட கிராமத்தினை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் பார்வையிட்டார். பின் சுரங்க பாதையை ஆய்வு செய்தார்.
கருங்குளம் அருகே கிளாக்குளம், குருக்கல்கோட்டை ஆகிய இரு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தாதன்குளத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டரில் ஊருக்குள் செல்ல சாலை உள்ளது. இந்த சாலையில் நெல்லை & திருச்செந்தூர் ரயில்வே பாதையை தாண்டித்தான் செல்ல வேண்டும். இங்கு ஆளில்லா ரயில்வே கிராஸிங் இருந்தது. இதில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என இவ்விடத்தில் சுரங்க பாதை அமைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்தது. இதனால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சாலையை மூடிவிட்டு சுரங்க பாதையை அமைத்தனர். ஆனால் இந்த பாதை தோண்டிய இடத்தில் தொடர்ந்து தண்ணீர் ஊற்று பொங்கி கொண்டிருந்த காரணத்தினால் பணியை கிடப்பில் போட்டு விட்டனர் ஒப்பந்த காரர்கள். இதனால் இந்த இரு கிராமங்களும் துண்டிக்கப்பட்டு விட்டது.
இந்த வழியாக சென்று வந்த மினி பஸ் 10 கிலோ மீட்டர் சுற்றி ஊருக்கு வந்து செல்கிறது. இதனால் கட்டணமும், பயண நேரமும் அதிகரிக்கிறது. மேலும் இந்த இரண்டு கிராம மக்களும் வல்லகுளம், காரசேரி சுற்றி தான் கருங்குளம் வரவேண்டியது உள்ளது. இருசக்கர வாகனங்கள் தற்போது வயற்காடு வழியாக வந்து செல்கிறது. மழை பெய்தால் அவர்களும் அந்த வழியை பயன்படுத்த முடியாது. மழை வெள்ளம் வந்தால் முழுவதுமே இந்த கிராமம் துண்டிக்கப்பட்டு விடும். எனவே உடனடியாக சுரங்க பாதையை அமைக்க வேண்டும். அல்லது இங்கு வரைபடத்தில் உள்ளது போல ரயில்வே கிராஸிங் வராமல் ஊருக்குள் வரும் மங்கம்மாள் சாலையை மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரி வந்தனர்.
இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் புதிதாக கட்டப்படும் ரயில்வே சுரங்க பாதையை பார்வையிட்டார். மேலும் மக்கள் பிரச்சனையை அரசுவுக்கு தெரிவித்து உடனடியாக சுரங்க பாதை அமைக்க ஏற்பாடு செய்யப்படும். சுரங்க பாதை மக்களுக்கு உதவாத பட்சத்தில் மங்கம்மாள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க படும் என அவர் உறுதி அளித்தார். அவருடன் கருங்குளம் கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் உடன் வந்தார்.


