தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்து வருகிறது.
கயத்தாறு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று மாலை 3½ மணிக்கு பலத்த இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இதேபோன்று சுற்றுவட்டாரத்தில் உள்ள வில்லிசேரி, தளவாய் புரம், ஆசூர், ராஜாபுதுக்குடி, சன்னதுபுதுக்குடி, செட்டிகுறிச்சி, வடக்கு கோனார் கோட்டை, புதூர், சாலைபுதூர், தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கனமழையால், மதுரை-நெல்லை சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இப்பகுதியில் உள்ள அனைத்து குளங்களிலும் மழை நீர் தேங்கியது. இந்த மழையால், இப்பகுதியில் மக்காச்சோளம், பருத்தி, கம்பு, பாசிப்பயிறு, செஞ்சோளம், சொங்கு சோளம், எள் உள்ளிட்ட மானாவாரி பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மேலும் நெல் நாற்றுக்களை பாவிய விவசாயிகளும் மனநிம்மதி அடைந்தனர். இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் நாற்றுப்பாவிய விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதேபோன்று, கழுகுமலை பகுதியில் நேற்று காலை 7 மணி முதல் மதியம் 2 மணிவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 3 மணியளவில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. சுமார் ½ மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழையால் கழுகுமலை -கோவில்பட்டி சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான தெருக்களில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து சாரல்மழை பெய்த நிலையில், மாலை 4 மணியளவில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 20 நிமிடங்கள் கனமழை பெய்தது. இந்த மழையால், கழுகுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களில் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


