தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட புறநகர் பகுதிகளில் இன்று காலை பலத்த மழை பெய்தது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மத்திய கிழக்கு வங்கக் கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி புறநகர் பகுதியில் இன்று காலையிலிருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை சுமார் 11:30 மணி அளவில் கோரம்பள்ளம், காலாங்கரை, சிப்காட், புதுக்கோட்டை உள்ளிட்ட புறநகர் பகுதியில் பலத்த மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் மனு அளிக்க வந்தனர்..


