தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் இலவச நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் இலவச நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் தெரு நாடகக் குழுவினரை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் 21 வகை மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை(UDID), சிறப்புப்பள்ளி சேர்க்கை-உணவு விடுதி இலவசம், கல்வி உதவித் தொகை 1 முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2,000, 6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.6,000, 9 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.8,000, இளங்கலைப் பட்டம் ரூ.12,000, முதுகலைப் பட்டம் ரூ.14,000ம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பார்வையற்ற மற்றும் காதுகேளாதோருக்கான மாற்றுத் திறனாளிக்கு மாவட்ட அளவில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், திருமண உதவித்தொகை திட்டம், பராமரிப்பு உதவித்தொகை திட்டம், நலவாரியம் வாயிலாக வழங்கப்பட்டு வரும் திட்டங்கள், மாற்றுத்திறனாளியின் மகன் மற்றும் மகள் கல்வி பயில வருடாந்திர உதவித்தொகை ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர் என ஆட்சியர் தெரிவித்தார்.


