திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் விழாவின் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களிலும், சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. பின்னர் 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 6.30 மணிக்கு முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து 7.05 மணிக்கு நிலையம் சேர்ந்தது.
அதனைத்தொடர்ந்து 7.10 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. தேரோட்டத்தை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.
தேரோட்டத்தை முன்னிட்டு தேருக்கு முன்பு யானை செல்ல பஞ்சவாத்தியங்கள் வாசிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து வள்ளியம்மன் எழுந்தருளிய தேரானது, நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு வீதிகளிலும் உலா வந்து நிலையம் சேர்ந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வசந்தராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


