கருங்குளம் ஒன்றியத்தில் நலிந்து வரும் பனை தொழிலை காப்பாற்ற புதிய தொழில் நுட்பத்தினை ஆராய்ச்சியாளர்கள் புகுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக கருதப்படும்தொழில் பனை தொழில். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு இந்த மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடந்தது. இதற்காக பனை வெல்ல கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கம் உள்பட பல அமைப்புகள் செயல் பட்டு வந்தது. கருங்குளம் ஒன்றித்தில் ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, கருங்குளம், தாதன்குளம், கிளாக்குளம், வல்லகுளம், அரசர்குளம், புதுக்குளம் ,திருவரங்கப்பட்டி, அரியநாயகபுரம், மணல்விளை, உடையனேரி, மல்லல், வெட்டிகுளம், தீராத்திகுளம், மகிழச்சிபுரம், சிரியந்தூர், சின்னார்குளம், கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, நடுவக்குறிச்சி, செட்டிமல்லன் பட்டி, காலாங்கரை உள்பட கிராமங்களில் ஒவ்வொரு ஊருக்கு தலா 50 பனை தொழிலாளிகள் இருந்தனர். கோடைக்காலத்தில் தான் பனை தொழில் துவங்–கும். குறிப்பாக சித்திரை, வைகாசி, மாதங்களில் இவர்கள் பனைதொழில் செய்வார்கள். பனையில் இருந்து பதனீர் இறக்கி, அதன்பின் அதை காய்த்து கருப்பட்டி ஆக்குவது வழக்கம். ஆனால் தற்போது இந்த தொழில் முழுவதுமாக குறைந்து விட்டது. பல ஊர்களில் பனை ஏற ஆள் இல்லாத காரணத்தினால் பனை மரம் வெட்டி விற்க்கப்பட்டு விட்டது.
பனைமரத்தினை பொறுத்தவரை இதில் விளையும் அனைத்து பொருள்களுமே மருத்துவ குணம் கொண்டது. ஆனால் நவீன உலகத்தில் உடலை மூலதனமாக வைத்து இந்த தொழில் செய்து வருவதை யாரும் விரும்புவது இல்லை. எனவே இவர்கள் தங்கள் வாரிசுகளை மற்ற வேலைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். தற்போது ஒவ்வொரு ஊரிலும் ஒருவர் பனை ஏறுவதே அபூர்வமாகி விட்டது. இதனால் பனை தொழில் முற்றிலும் அழிந்து விட்டது. இதனால் நோய் தீர்க்கும் அபூவர்வ பொருள் கிடைக்கும் பனைமரம் வீணாகி வருகிறது. எனவே இதை தடுக்க நவீன தொழில் நுட்பத்தினை பயன்படுத்த வேண்டும் என்று பனை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அரசர்குளத்தினை சேர்ந்த பனை தொழிலாளி மகாலிங்கம் கூறும் போது, எங்கள் கிராமத்தினை பொறுத்தவரை 15 வருடங்களுக்கு முன்பு பனை தொழிலாளர்கள் 100 பேர் இருந்தனர். தற்போது 6 பேர் தான் பனை ஏறுகிறார்கள். அந்த தொழில் செய்வதை உறவினர்கள் விரும்புவது இல்லை. பெண்களும் பனை தொழிலில் ஈடுபடுவதை விரும்புவது இல்லை. காரணம் பனை தொழிலில் புதிய தொழில் நுட்பம் எதையும் அரசு புகுத்தவில்லை. இயந்திரம் மூலம் பனை ஏறும் தொழில் நுட்பத்தினை எங்கள் பகுதியில் அறிமுகப்படுத்தவே இல்லை. இதனால் தொழில் மீது நாட்டம் குறைகிறது. எனவே புதிய தொழில் நுட்பத்தனை புகுத்தி நலிவடைந்த பனை தொழிலை மேன்மை படுத்த வேண்டும் என்றார்.
கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் பனை பயிருக்கு என ஒரு பிரிவு உள்ளது. ஆனால் அந்த பிரிவு அருகில் உள்ள பனை தொழிலை மேம்படுத்த, எந்த கூட்டமும், கருத்தரங்கும் நடத்துவது இல்லை. எனவே அரசு தலையிட்டு புதிய தொழில் நுட்பத்தினை பனை தொழிலில் புகுத்த வேண்டும் என்று பனை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாக்ஸ் போடலாம்
பனைதொழிலாளர் நல வாரியத்தின் மூலம் பென்சனை அரசு வழங்கி வருகிறது. அந்த பென்சனும்மாதம் மாதம் கிடைப்பதில்லை. எப்போதாவது ஒரு நாள் தான் பென்சன் பணமும் வருகிறது. எனவே நலிவடைந்த பனை தொழிலாளிகள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.


