தூத்துக்குடியில் “களி நண்டு மற்றும் சிங்கி இறால் கொழுக்க வைத்தல்” குறித்த பயிற்சி முடித்த பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்ட்டது.
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் மீன் வளர்ப்பு துறையில் “‘களி நண்டு மற்றும் சிங்கி இறால் கொழுக்க வைத்தல்” குறித்த ஒரு நாள் உள் வளாக பயிற்சி நேற்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 5 மகளீர் உட்பட 23 பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். .
இப்பயிற்சியில் வளர்ப்பிற்கேற்ற களி நண்டு மற்றும் சிங்கி இறால் வகைகள், களி நண்டு மற்றும் சிங்கி இறால்களில் ஆண் பெண் அடையாளம் கண்டறிதல், களி நண்டு மற்றும் சிங்கி இறாலின் இனவிருத்தி, களி நண்டு மற்றும் சிங்கி இறாலின் வளர்ச்சி, கொழுக்க வைக்க களி நண்டு மற்றும் சிங்கி இறால் தேர்வு செய்யும் முறை, கிடைக்கும் காலங்கள், இடங்கள், களி நண்டு மற்றும் சிங்கி இறால் வளர்ப்பு முறைகள், அறுவடை முறைகள், களி நண்டு மற்றும் சிங்கி இறால் வளர்ப்பு செலவின வருமான கணக்கீடு குறித்த தொழில்நுட்ப வகுப்பு மற்றும் செயல்விளக்க பயிற்சிகள் வழங்க பட்டது.
இப்பயிற்சியின் நிறைவு விழாவில் மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ப. அகிலன் பயிற்சியில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், தனது உரையில் இப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும், பொருளாதாரத்தில் நலிந்த மீனவ சமுதாயத்திற்கு இப்பயிற்சியால் ஏற்படும் மாற்று தொழில்கள் மூலம் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என்று எடுத்துரைத்தார்.
மேலும், இப்பயிற்சியின் மூலம் சுய தொழில் தொடங்குவதற்கான வழி வகைகள் குறித்து துறை பேராசிரியர் மற்றும் தலைவருமான முனைவர் சா.ஆதித்தன் விரிவாக எடுத்து கூறி பயிற்சியை நடத்தினார். மேலும், களி நண்டு மற்றும் சிங்கி இறால் கொழுக்க வைத்தல் பற்றிய விளக்கங்கள் அறிய மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அலைபேசி எண் 09442288850, மின் அஞ்சல் athithan@tnfu.ac.in மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..


