மயில்சாமி 2 அக்டோபர் 1965 – 19 பிப்ரவரி 2023) என்பவர் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? போன்றவற்றில் நடுவராகவும் பங்களித்துள்ளார். நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் (திரைப்படம்), கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார்.
மயில்சாமி 1965 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று சத்தியமங்கலத்தில் பிறந்தார். நடகராகும் ஆசையுடன் 1977இல் சென்னைக்கு வந்தார். ஒரு உணவகத்தில் பகுதி நேர வேலையில் சேர்ந்து, திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். தாவணிக் கனவுகள் படத்தின் படப்பிடிப்பில் பாக்யராஜை சந்தித்து வாய்ப்பு கேட்டார். அவரிடம் தன் பலகுரல் திறமையைக் காட்டினார். ம. கோ. இராவின் குரலில் பேசிக்காட்டி அவரைக் கவர்ந்தார். அன்றைய நாளை அப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இரண்டாவதாக கன்னிராசி திரைப்படத்தில் கவுண்டமணியிடன் பேசி நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அவ்வப்போது சில படங்களில் நடிக்கத் துவங்கினார்.
இந்நிலையில் 1987இல் மயில்சாமியும், இலட்சுமண் சுருதி இலட்சுமணனும் இணைந்து வெளியிட்ட “சிரிப்போ சிரிப்பு” பலகுரல் நகைச்சுவை ஒலிப்பேழை பெரிய வெற்றியை ஈட்டியது. இதன்பிறகு அடுத்து வந்த பத்தாண்டுகள் உள்ளூரில் பிரபலமாக இருந்த நகைச்சுவைக் குழுவுடன் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்தார்.
புத்தாயிரத்துக்குப் பிறகு விவேக்குடன் நடிகத் துவங்கியது இவரது திரைப்பட வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது. அதன்பிறகு இவரின் திறமை திரைப்படங்களில் பலவகையில் வெளிப்பட்டது. பின்னர் இவர் பிரபலமான தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் வலுவான துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார். மயில்சாமி ஒரு புகழ்பெற்ற மேடைக் கலைஞர், நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நாடகக் கலைஞர், தமிழ் தொலைக்காட்சி துறையில் ஒரு பன்முக ஆளுமையாக வலம் வந்தார். மயில்சாமி தமிழ் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு? என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் நடுவராகவும் அறிமுகமானார்.


