வைகோ (இயற்பெயர்: வை. கோபால்சாமி, பிறப்பு: மே 22, 1944) தமிழக அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன பொதுச்செயலாளர் ஆவார். இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
வை கோபால்சாமி பிறந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டி ஆகும். வையாபுரி – மாரியம்மாள் தம்பதியினருக்கு 1944ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு மூன்று சகோதரிகள், ரவிச்சந்திரன் என்ற இளைய சகோதரரும் உள்ளனர்.
வை.கோ ரேணுகாதேவி என்ற பெண்ணை 14ஆம் தேதி சூன் மாதம் 1971ஆம் ஆண்டு மணந்தார், இவர்களுக்கு துரை வையாபுரி என்ற மகனும் ராஜலட்சுமி–ராஜசேகரன் மற்றும் கண்ணகி–பாலகிருஷ்ணன் என்ற மகள்களும் உள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த இவர் 1992 இல் திமுக தலைவர் கருணாநிதியைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று கொலைப் பழி சுமத்தித் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்.
மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் (03/04/1978-02/04/1996), இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருபவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக 2001 இல் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையிலிருந்தார்.


