தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி சின்னமணி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சுகுமார். இவர் நாகப்பட்டினம் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி புனிதா சென்னையில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள், அதில் ஒருவருக்கு திருமணம் ஆன நிலையில் மற்றொருவருக்கு வரன் பார்த்து திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது
இந்நிலையில் சுகுமார் கடந்த பத்தாம் தேதி சென்னைக்கு தனது குடும்பத்தை பார்க்க சென்றுள்ளார். தூத்துக்குடி சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்த அமுதா என்ற பெண் வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். அமுதா இன்று காலை வழக்கம் போல் வீட்டை சுத்தம் செய்வதற்காக வீட்டு முன்பக்க கதவை திறந்த போது உள்ளே கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள சுகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டு தென் பாகம் காவல் நிலையத்தில் சுகுமார் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் மற்றும் மோப்பநாய் தடையவியல் துறையினர் ஆகியோர் வந்து கொள்ளை சம்பவம் குறித்து சோதனை நடத்தினர். இதில் சுகுமார் வீட்டிலிருந்து அவரது மகள் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கோட்டை சுவரை ஏறி குதித்த கொள்ளை கும்பல் வீட்டின் முன்பக்க கிரில் கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த இரண்டு லாக்கரையும் அருகே இருந்த சாவியை பயன்படுத்தி திறந்து மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து கொள்ளை கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த கொள்ளை சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


