தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு தம்பிராட்டி அம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு இன்று மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடந்தது.
இரண்டு பிரிவுகளாக நடந்த இந்த போட்டியில் 7 பெரிய மாட்டு வண்டிகளும், 14 சிறிய மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டனர். போட்டியில் வல்லநாட்டில் இருந்து மணக்கரை வரையில் 8 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
முதலில் பெரிய மாட்டு வண்டிகள் பந்தயத்தை காளைகள் வளர்ப்போர் சங்க மாநிலத் தலைவர் வேலன்குளம் கண்ணன் தொடங்கி வைத்தார்
இந்த பெரிய மாட்டு வண்டிகள் பந்தயத்தில் முதல் பரிசான 51 ஆயிரம் ரூபாயை வேலன்குளம் கண்ணன் மாட்டு வண்டியும், இரண்டாம் பரிசு 41 ஆயிரத்தை ஐயங்கார் மாட்டு வண்டியும், மூன்றாம் பரிசு 31 ஆயிரத்தை சீவலப்பேரி துர்காம்பிகா மாட்டு வண்டியும் தட்டிச் சென்றது.
அதைத் தொடர்ந்து சிறிய மாட்டு வண்டிகள் கலந்து கொண்ட பந்தயம் நடந்தது. இதனை உள்ளூர் பிரமுகர்கள் தொடங்கி வைத்தனர். இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


