சமந்தா ருத் பிரபு பிறப்பு: ஏப்ரல் 28, 1987 இந்தியத் திரைப்பட நடிகையும் உருமாதிரிக் கலைஞரும் ஆவார்.இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு மலையாள, தெலுங்கு இணையருக்குப் பிறந்த இவர் சென்னையில் வளர்ந்தார்.2007இல் இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை (2010) இவர் பெற்றுக் கொண்டார். இவர் அதன்பிறகு நடித்த பிருந்தாவனம் (2010), தூக்குடு (2011), சீத்தம்ம வாகிட்டிலோ சிரிமல்லி செட்டு (2012), அத்தாரிண்டிகி தாரேதி (2013), கத்தி (2014) போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற, தமிழ், தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெயர்பெற்ற, கூடிய சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக உள்ளார். இவரது அழகும் துல்லியமான நடிப்பும் இவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் வைத்திருக்கின்றன.
சென்னையில் பிறந்த இவருக்கு யசோதா என்ற பெயரும் உண்டு.இவர் சென்னை தி. நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ – இந்திய மேல்நிலைப்பள்ளியில் இளமைக்கால கல்வியும், பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார். பின்னர் கௌதம் மேனன் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.


