உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்ற உ. வே. சாமிநாதையர் (19 பெப்ரவரி 1855 – 28 ஏப்ரல் 1942, சுருக்கமாக உ.வே.சா) தமிழறிஞரும், பதிப்பாளரும் ஆவார். இவர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் தமிழ்த் தாத்தா எனச் சிறப்பிக்கப்பட்டார். தமிழ் மொழியில் அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி அலைந்து பெற்று அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா. அவர்கள் 90-இற்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000-இற்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.
சாமிநாதையர் 1855 பிப்ரவரி 19 இல் தஞ்சாவூர் மாவட்டத்தின் சூரியமூலையில் வேங்கட சுப்பையர், சரசுவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். தற்போதைய திருவாரூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, உத்தமதானபுரம் எனும் சிற்றூரே இவரது தந்தையின் சொந்த ஊர் என்றாலும் தாயின் ஊர் சூரியமூலை ஆகும். இவரின் தந்தை இசையுடன் அரிகதை காலாட்சேபம் செய்து வந்தவர். உ.வே.சா. தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர்த் தன் 17-ஆம் வயதில் நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த மகாவித்துவான் என அழைக்கப்பட்ட மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த இவர், பின்னர்ச் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.


