ஸ்ரீவைகுண்டம் அணையில் ஏற்பட்டுள்ள விரிசல்களையும் பழுதடைந்துள்ள மதகுகளையும் ஆய்வு செய்த பொதுப்பணித் துறை அதிகாரிகள், உடனடியாக பழுதுகள் சரிசெய்யப்படும் என உறுதியளித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் அணை பராமரிப்பின்றி பல இடங்களில் சேதமாகியுள்ளதுடன், அணையுடன் கூடிய கல்பாலத்தின் மேல்பகுதியில் அரச மர செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. மேலும் அணையின் மதகுகள் மற்றும் தடுப்புச்சுவர்களில் விரிசல் எற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி கடலில் கலந்து வருகிறது.
இதை சீரமைக்கக் கோரி விவசாயிகளும் ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கத்தினரும் பொதுப்பணித் துறையினரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் அணையை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், அணையின் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார். இதையடுத்து பொதுப்பணித் துறையின் மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் செல்வராஜ் தலைமையில் கோட்டப் பொறியாளர் சுப்பிரமணியன், கண்காணிப்பு பொறியாளர் ரவி, உதவி செயற்பொறியாளர் அண்ணாதுரை, பொறியாளர் பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஸ்ரீவைகுண்டம் அணையை சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பழுதான மதகுகள், தடுப்புச்சுவர்களில் விழுந்துள்ள விரிசல்கள் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்து, ஒருவார காலத்திற்குள் அணையின் மதகுகளை முழுமையாக சீரமைத்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் பொதுப்பணித் துறையினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அப்பொழுது, ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், சட்ட ஆலோசகர் முத்துராமலிலிங்கம், வழக்குறைஞர் ரமேஷ், சமூக ஆர்வலர் சித்திரை உள்ளிட்டோரும் அதிகாரிகளிடம் இது குறித்து முறையிட்டனர்.


