வெள்ளூர் சிவகாமி அம்பாள் நடுநக்கர் மத்தியபதீஸ்வரர் கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரில் மிகவும் பழமையான சிவகாமி அம்பாள் சமேத நடுநக்கர் மத்தியபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் வருடம் தோறும் மாசித்திருவிழா 10 தினங்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதே போல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினம் தோறும் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடந்தது.
இதற்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து சுவாமி அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.
அதைத் தொடர்ந்து திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பக்தியுடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேரானது கீழரத வீதி, மேலரத வீதி, வடக்கு வீதி மற்றும் தெற்கு வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலை வந்தடைந்தது. அதன்பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.


