ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தோழப்பண்பண்ணை தாமிரபரணி ஆற்றுக் கரையோரத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட லோடுவேன் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் மணல் கொள்ளையை தடுக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் உள்ள தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளிலும் அதன் கரையோரங்களிலும் கடந்த காலங்களில் மணல் கொள்ளை பல்வேறு வடிவங்களில் நடைபெற்று வந்தது.
குறிப்பாக தோழப்பண்பண்ணை தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் அரசே குவாரி அமைத்து மணல் அள்ளியபொழுது எழுந்த விதிமீறல் புகார்களை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் 2011ம் ஆண்டு முதல் 2105ம் ஆண்டு வரையில் தாமிரபரணி ஆற்றில் எந்த பகுதியிலும் மணல் குவாரி அமைக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இவ்வுத்தரவிற்கு மாறாக 2015ம் ஆண்டில் தூர்வாரும் பணி என்ற பெயரில் மணல் கொள்ளை நடைபெற்றதாக சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, பசுமை தீர்பாயத்தில் தொடர்ந்த வழக்கிலும் தூர்வாரும் பணிக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் தாசில்தாராக தாமஸ் பயஸ் அருள் பொறுப்பேற்ற பின்னர் கலெக்டரின் உத்தரவின் பேரில் மணல் கொள்ளை மற்றும் நிலத்தடி நீர் கொள்ளைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.
இதனால் மணல் கொள்ளை கட்டுபடுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ஸ்ரீவைகுண்டம் சப்-இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் தலைமையிலான போலீசார், தோழப்பண்பண்ணை தாமிரபரணி ஆற்றுக் கரையோரத்தில் லோடு வேனில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.
போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய கால்வாய் பகுதியை சேர்ந்த கோவில் குட்டி மகன் முருகன்(28) என்பரை தேடி வரும் போலீசார் மணல் கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட லோடு வேனை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், தாமிரபரணி ஆற்றுக் கரையோரங்களில் இரவு நேரத்தில் மீண்டும் தொடங்கியுள்ள மணல் கொள்ளையை தடுக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


