வசந்த் பிரபலமான தமிழ்த் திரைப்பட இயக்குநர். தமிழ்நாட்டில் உள்ள தேவகோட்டையில் பிறந்தவர். இவர் தன்னுடைய பள்ளி கல்வியை தேவகோட்டை சிறீநிவாசா நடுநிலைப் பள்ளியிலும் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி, கடலூரிலும் பயின்றார். இவருடைய முதற்படமான கேளடி கண்மணி சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. எஸ். பி. பாலசுப்பிரமணியம் நடித்த இந்தப் படம் திரையரங்குகளில் 285 நாள் ஓடிச் சாதனை படைத்தது. தமிழ்த் திரையுலகில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாக கேளடி கண்மணி திரைப்படம் கருதப்படுகிறது.
வசந்த் சிறுகதை எழுதியும் பத்திரிக்கையாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.. பிறகு கே.பாலசந்திரடம் சிந்து பைரவி, புன்னகை மன்னன் உட்பட 18 படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். பின் தன்னந்தனியாக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு 285 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நடிப்பில் வெளிவந்த கேளடி கண்மணி திரைப்படத்தை 1990 இல் இயக்கினார். இவரது அடுத்த படம் முந்தைய படத்தில் இடம்பெற்ற பாடலின் தலைப்பை தாங்கி வந்த நீ பாதி நான் பாதி திரைப்படம் மணமாகாத தாய்மார்களைப் பற்றி பேசியது. இந்த படத்தில் வரும் ‘நிவேதா’ என்ற ஒற்றை வார்த்தையில் உருவாக்கப் பட்டிருக்கும் பாடல் படமாக்கபட்டிருக்கும் விதம் பரவலாக பேசப் பட்டது. இவரது மூன்றாவது படைப்பு த்ரில்லர் வகையை சார்ந்த ஆசை 1995 ஆம் ஆண்டு வெளியாகி 200 நாட்கள் ஒடி வணீக ரீதியாக புது பாதையை உருவாக்கியது. மணி ரத்னம் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் அஜித் குமாருக்கு வணிக ரீதியாலான மாற்றத்தை மட்டுமின்றி தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகனாகவும் வழிவகுத்தது. தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளில் ஒன்றான சிறந்த அறிமுக கதாநாயகிக்கான விருது சுவலட்சுமிக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது வசந்துக்கும் வழங்கப்பட்டது.


