இளங்கோவனுக்கு, ஜுபிடர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரித்த ‘கண்ணகி’தான் பெரும் பெயரை பெற்றுத் தந்தது. அதில் அவரோடு உதவியாளராகப் பணியாற்றிவர் சகஸ்ரநாமம். அந்த இளங்கோவனின் கடைசிக் காலகட்டத்தில் அவருக்கு உதவியிருக்கிறார்.
அவர் குழுவில் நடித்த நடிகர் நடிகைகள் பட்டியல் வெகு நீண்டது. சிவாஜி, முத்துராமன், குலதெய்வம் ராஜகோபால், வி. கோபாலகிருஷ்ணன், கள்ளப்பார்ட் நட்ராஜன், ஏ.கே. வீராச்சாமி, ஏ.வீரப்பன், கம்பர் ஜெயராமன், பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இயக்குநர் கே. விஜயன், சத்யராஜ், பி.ஆர். துரை, மாஸ்டர் பிரபாகர், எஸ்.என்.லட்சுமி, எம்.என். ராஜம், பண்டரிபாய், மைனாவதி, தேவிகா, ஜி.சகுந்தலா, காந்திமதி என்று பட்டியல் நீள்கிறது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எம்.வி.வி ஒரு முறை சொன்னார். “சகஸ்ரநாமம் அப்போது பெரிய புகழ் பெற்ற நடிகர். ஜானகிராமன் அவர் அலுவலகத்தில் கிறுக்கல் கிறுக்கலாக ஒவ்வொரு பக்கமாக ஸ்கிரிப்ட் எழுத எழுத அவர் பக்கத்திலேயே இருந்து அதை ஆசையாசையாய் சகஸ்ரநாமம் உடனுக்குடன் எடுத்துப் படிப்பதை நான் கண்டேன்.”
தான் விரும்பிய சில தமிழ் இலக்கியங்களை மனப்பாடம் செய்திருந்த எஸ்.வி.எஸ், என்.எஸ்.கே. மறைந்தபோது வானம் மேகமூட்டத்தோடு இருந்ததை இப்படிச் சொல்கிறார்.
“கதிரவனைக் காணாது கமல மலர் வாடுமென கவிகள் சொல்லக் கேட்டதுண்டு. கமலத்தைக் காணாததால் அன்று கதிரவனே வாடியிருந்தான்.” என்.எஸ்.கேயுடனான அவரது உறவு ரொம்பவும் விசேஷமானது. என்.எஸ்.கே. இவருக்கு பதினாறு வயதில் பழக்கமாகிறார். அவரோடு இளம் வயதில் நாடகத்தில் நடித்த ஒரு சம்பவத்தை இப்படி குறிப்பிடுகிறார்.
“சிலோனில் ஒரு முறை நாங்கள் நாடகங்கள் நடத்தச்சென்றோம். அங்கு நடத்தப்பட்ட கிருஷ்ணலீலா நாடகத்தில் நரகாசுரனாக என்.எஸ்.கே. நடிக்கிறார். அவர் மகன் பாத்திரத்தில் நான் நடிக்கிறேன். நரகாசுரன் வீழ்கிறான். அவர் வீழ்ந்ததும் ‘அப்பா, எனக்கு ஒரு வழியும் காட்டாமப் போறீங்களே’ என்று அவர் மேல் நான் விழுந்து அழும் காட்சி. நான் அப்படி சொல்லி அவர் மேல் விழுந்து அழும்போது என்.எஸ்.கே. சொல்கிறார். ‘மகனே கலங்காதே. அப்படியே தனுஷ்கோடி வழியா போ’ என்கிறார். அது நான் அழ வேண்டியக் காட்சி. எனக்கோ சிரிப்பு வந்துவிட்டது. நல்ல வேளை முகத்தை உடனே, அந்தப் பக்கம் முகம் திருப்பிக் கொண்டு, நான் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது, இந்தப் பக்கம் பார்ப்பவர்களுக்கு நான் அழுவது போல் தெரிந்தது.”
என்.எஸ்.கேயைப்பற்றி லக்ஷ்மிகாந்தன் அவதூறாக எழுதியபோது, அவரது இந்துநேசன் அலுவலகத்துக்கேச் சென்று அச்சு இயந்திரங்களை சுத்தியலால் அடித்து உடைத்துள்ளார் எஸ்.வி.எஸ். இந்தச் சம்பவத்துக்குப் பின், அவரை சந்தித்த எம்.ஆர். ராதா “வாய்யா, பிராமண ரௌடி” என்று செல்லமாக அழைத்தாராம். என்.எஸ்.கே. சிறையில் இருந்தபோது, வழக்குச் செலவுகளுக்குப் பணம் திரட்ட அவரது நாடகக்குழுவை எடுத்து நடத்தி, அவர் சிறையில் இருந்து திரும்பியதும் அதனை அவரிடமே ஒப்படைத்துள்ளார் எஸ்.வி.எஸ்.


