தூத்துக்குடி- தருவைக்குளம் அருகிலுள்ள பட்டிணமருதூரில் இந்திய தொல்லியல்துறையினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவினை சார்ந்த தருவைக்குளம், பட்டினமருதூர், மேலமருதூர் மற்றும் கீழஅரசடி ஆகியவைகள்தான் 13ம் நூற்றாண்டு இறுதியில் பொ.ஊ 1292ல் தென்-இந்தியா கோரமண்டல்(கிழக்கு கடற்கரை பகுதிக்கு மார்க்க போலோ வந்து சென்றதாக கருதப்படும் கீழபட்டினம் (எ) கயல்பட்டினம் நகரமா என்ற கோணத்தில் இந்த மிக தொன்மையான வைப்பாற்று நாகரீகத்தின் மறைந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொணரும் விதமாக
சில முக்கிய வரலாற்று ஆவணங்கள் மற்றும் தொன்மையான தென்னிந்திய பொ.ஊ1710 – 1794 ஆண்டுகள் வரையிலான வரைபட பதிவுகளை ஆதாரங்களாக கொண்டு தூத்துக்குடியினை சேர்ந்த வரலாற்று மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் என்பவர் வருவாய்துறை மூலமாக தனது வேண்டுகோல்களை பல கட்டங்களாக பதிவு செய்து
தொடர்ந்து தனது புரிதல்களையும், ஆவணக்குறிப்புகளையும் விரிவாக விளக்கும் விதமாக 09.05.2023 அன்று ‘கயல்பட்டினம் (எ) கீழபட்டினம்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை –தேடுதல் பகுதி1 என்பதை புத்தகங்களாக அச்சடித்து அதை தூத்துக்குடி – மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்து இலவசமாக மற்ற வருவாய்துறை அதிகாரிகளிடமும், சக வரலாற்று ஆர்வலர்களிடமும், வரலாற்று மாணவ மாணவியரிடமும் மற்றும் இந்த பகுதி பொதுமக்களிடமும் பகிர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்துள்ளார்.
இதன் பயனாக பொதுமக்களின் உதவியுடன் கடற்கரை பகுதியில் பட்டினமருதூர் கிராமத்தில் தான் கண்ட வரலாற்று சிதைவுகள், தெய்வ திருமேனிகள், வீரக்கல், தொன்மையான நாணயங்கள், தொன்மையான சுழல்கல், மீன் முத்திரையிட்ட எடைக்கல் / நங்கூரக்கல், கற்கால ஆயுதங்கள், அரேபிய மொழியிலுள்ள தொன்மையான கல் வெட்டு, பெருங்கற்கால குறியீடுகள் போன்று காணப்படும் மண் கல்லால் ஆன சில பீட கற்கல், மகாவீரர் சிற்ப தோரண வளைவில் காணப்படும் வட்ட வடிவ குடை போன்ற சிற்பத்தின் சிதைவு மற்றும் வித விதமான மண் ஓடுகள் ஆகியவற்றைவருவாய்துறை மூலம் பதிவு செய்ததன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் மூலம் துறை ரீதியாக மாநில தொல்லியல்துறைக்கு தனி தனி பரிந்துரைகளும், நினைவூட்டல்களும் அனுப்பபட்டு எவ்வித பலன் இல்லாத நிலையில் பெ.ராஜேஷ் அவர்களின் பிரதான மந்திரியின் அலுவலக இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட மேல் முறையீட்டின் வாயிலாக தூத்துக்குடி – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் இந்திய தொல்லியல்துறையின் திருச்சி மண்டல அலுவலகத்திற்கு 01.12.2023 அன்று முறைப்படி ஆய்வுக்காக பரிந்துரைக்கப்பட்டதாகவும் இதன் தொடர்ச்சியாக 04.12.2023 அன்று இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் பட்டினமருதூர் வருகை தந்து பூர்வாங்க கள ஆய்வுகளை மேற்கொண்டதாகவும்,

மேலும் விரைவாக நடவடிக்கை எடுத்து சிதைவுகளும், சிற்பங்களும் அதிகம் காணப்படும் இந்த பகுதிகளை நிச்சயம் ஆய்வு செய்வோம் என்று உறுதியளித்திருந்ததன் அடிப்படையில் நேற்று இந்திய தொல்லியல்துறை – திருச்சி மண்டலத்தின் அதிகாரிகள் யாத்தீஸ்குமார், மணிகண்டன் மற்றும் ராணிமோல் ஆகியோர் ஸ்ரீ வீரபாண்டிய விநாயகர் ஆலயம், ஸ்ரீ மாலைக்கோவில் மற்றும் சர்வே எண்கள் 34, 40 ஆகிய பகுதிகளை முதல்கட்ட கள ஆய்வு மேற்கொண்டதாகவும், இந்த கள ஆய்வின் போது ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் – சார்பாக கிராம நிர்வாக அதிகாரி பார்த்தசாரதி, பட்டினமருதூரினை சேர்ந்த பொதுமக்கள் சிலர், ஸ்ரீ வீரபாண்டிய விநாயகர் ஆலய பூசாரி பச்சைப்பெருமாள் மற்றும் இந்து முன்னணி-யின் தூத்துக்குடி மாநகர தலைவர் இசக்கி முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்ததாகவும் தகவல் தெரிவித்தார்.
மேலும் தான் கண்டெடுத்த வரலாற்று எச்சங்களை வைத்து பார்த்தால் இந்த பகுதியானது பெருங்கற்காலம் முதற்கொண்டு பிரதான துறைமுக நகரமாக செயல்பட்டு வந்ததன் பல வித நாகரீக பரிணாம தொடர்புகளை உணர முடிவதாகவும், சங்க காலம் முதல் பாண்டியர்களிடமும், பின்பு பல்லவர்களிடமும், அதன் பின்பு 10ம் நூற்றாண்டில் சோழர்களிடம் ‘கேரளாந்தகபுரம்(குரங்குடிநாடு)’ என்ற பெயரிலும், பின்பு மீண்டும் 12ம் நூற்றாண்டில் பாண்டியர்களிடமும் கட்டுப்பாட்டில் இருந்து வந்த பிரதான துறைமுக நகரமான ‘கீழபட்டினம் (எ) கயல்பட்டினம்’ போன்று தோன்றுகின்றது என்றும் மகாபலிபுரத்தின் கடற்கரை கோவிலை போன்று இங்கும் ‘பல்லவர்களின் 7 பகோடா’ ஆலயம் போன்று ஓர் ஆலயம் இருந்து மண்ணில் புதையுண்டுள்ளதை உணர முடிவதாகவும் தெரிவித்தார்.
மேலும் குறிப்பாக 10ம் நூற்றாண்டில் இப்பகுதியில் மலட்டாறு என்ற ஆறு ஓடியதாக வரலாற்று பதிவுகள் உள்ளதாகவும் அதற்கு சான்றாக பட்டினமருதூருக்கு வடமேற்கு பகுதியில் உள்ள தெற்கு கல்மேடு—துரைச்சாமிபுரம் பெருமாள் ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் அவ்வூருக்கு தெற்கேயும், வடக்கேயும் ஆறு—கடல் சங்கமத்தினை குறிக்கும் ‘கீழமேல் இரு ஜோடி இணை மீன் குறியீடுகளும்’ உள்ளதாகவும் ஆனால் தற்போது மலட்டாறு என்பது சாயல்குடி அருகே ஓடி கடலில் கலப்பதாகவும் இந்த ஆற்றின் வழித்தடம் மிகப்பெரிய இயற்கை சீற்றத்தால் இடம்மாறியிருக்கலாம் என்றும் தனது அய்யப்பாடுகளை பதிவு செய்தார். விரைவாக அகழாய்வு செய்து பொதுமக்களின் கோரிக்கையையும், தனது கோரிக்கையையும் நிறைவேற்றிட மத்திய தொல்லியல்துறையினர் எல்லாம் வல்ல இறைவனின் ஆசிகளோடு சிறப்பாக செயல்படுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கள ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட தொன்மையான நாணயங்கள் மற்றும் சிதைவுப் பொருட்கள் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சார்பாக தலைமையிடத்து துணை வட்டாட்சியரிடம் ஒப்படைத்து ஆவணப்படுத்தப்பட்டன.


