அந்த கால கட்டத்தில் ரேடியோ ஒன்னு தான் ஒரே தகவல் தொடர்பு உபகரணம்னு சொல்லலாம்… 90 வாக்கில சேட்டிலைட் தொலைக்காட்சி கூட இல்லாமல் கொடைக்கானல் தமிழ் தூர்தர்சன் ஒன்னு தான் பொழுது போக்கு சாதனம். மற்ற படி சினிமா சம்பந்தமான தகவலுக்கு வண்ணத்திரை போன்ற பத்திரிக்கைகள் தான் எல்லாருக்கும் செம்ம தீனியா அமைஞ்சது. அதனால புல்லாங்குழல் வாசிப்பவர் நெப்போலியன் சாருன்னு தெரியும்… அதே போல பாடல் பாடிய அருண்மொழி என்பவர் அந்த சமயத்தில் வேறு ஒரு பாடகராக தான் மனதில் எண்ணி இருந்த நேரம். இருவரும் ஒருவரே என்பது பல வருடங்கள் கழித்து தான் கிராம புரத்தில் இருக்கும் நம்மள போன்ற நபர்களுக்கு தெரியவே வந்தது. அப்பெல்லாம் இசை கலைஞர்களின் புகைப்படங்கள் அதிகமா பத்திரிக்கையில் வந்ததில்லை. பிற்பாடு தான் சேட்டிலைட் டிவிக்கள் வந்த பிறகு புரிய வந்தது… நெப்போலியன் சாரும் அருண்மொழி சாரும் வெவ்வேறானவர்கள் அல்ல.. இருவரும் ஒருவரே என்று.
“என்னோட லைஃபை நான் ஸ்டார்ட் பண்ணல… அது நதி போல போகுது… இசைஞானியை முதன் முதலில் அந்தி வேளையில் 6 மணிக்கு பார்க்கிறேன்… அடுத்த நாள் ரெக்கார்டிங் தியேட்டரில் முதலில் நோட்ஸ் கொடுத்து பின் வாசித்த முதல் பாடல் “வந்தாள் மஹாலஷ்மியே”… காரில் ஒரு நாள் இசைஞானியிடம் செல்லும் போது என்னை பார்த்து “என்ன பாட்டு எனக்கு நீங்க வாசிச்சீங்க..
“வந்தாள் மஹாலஷ்மியே” பாடல் சார்…
“ஓ அன்னிக்கே மஹாலஷ்மி உங்க வீட்டுக்கு வந்தாச்சா…” இசைஞானி
மலையோரம் வீசும் காற்று நான் வாசித்த இரண்டாவது பாடல். ரெகுலராக வாசிக்க கூப்பிட்டு ஒரு மாதம் டைம் கேட்டு நான் அவருடன் ஜாயின் செய்து வாசித்த முதல் பாடல் “ஒரே முறை உன் தரிசனம்” காலையில் இந்த பாடல்… மதியம் “பல்லவியே சரணம்” என்ற பாடல்…” ஒரு பேட்டியில் நெப்போலியன் சார்…
இசைஞானியின் இசைக்குழுவில் புல்லாங்குழல் கலைஞராக இடம்பிடித்தது போல் பாடகரானதும் ஒரு எதிர்பாராத சம்பவமாகவே ஆனது… இவர் மற்ற பாடகர்களுக்கு பாடல் சொல்லி கொடுப்பதை கவனித்த இசைஞானி “நான் என்பது நீ அல்லவா பாடலை நீங்களே பாடுங்கள்” என்று கூறி அருண்மொழி சாருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.. கமலில் தொடங்கி ரஜினி சத்யராஜ் விஜய்காந்த் பிரபு ராமராஜன் பார்த்திபன் ராம்கி பிரபுதேவா என்று தற்போதைய நடிகர் விஜய் வரை அனைவருக்கும் தமது வசீகர குரலால் பாடல் பாடி முன்னணி பாடகர் வரிசையில் தடம் பதித்து இடம் பிடித்தவர்.
அந்த காலத்தில் ஜெமினிக்கு எப்படி A.M.ராஜா ஆஸ்தான பாடகராக அமைந்தாரோ அது போல நடிகர் பார்த்திபனுக்கு ஆஸ்தான பாடகரானார் திரு.அருண்மொழி அவர்கள்.. தாலாட்டு பாடவாவில் அனைத்து பாடல்களையும் இசைஞானி இவரையே பாட வைத்து முன்னணி பாடகர்கள் வரிசையில் இவர் உருவாக்கிய அருண்மொழி என்ற பெயரையும் இடம் பெற செய்தார்…
பாடல்களால் அருண்மொழியாகவும் புல்லாங்குழல் இசையால் நெப்போலியன் செல்வராஜாகவும் உலக தமிழ் ரசிகர்கள் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர்… இசைஞானியின் இசைக்குழுவில் புல்லாங்குழல் கலைஞராக அவதரித்தும், பாடகராக ஆனதுடன், வாசகி வாசகி (அரசியல்), ஜாலி ஜாலி லைப் (உல்லாசம்), எனக்கொரு மகன் பிறப்பான் படத்தில் அனைத்து பாடல் என எழுதி கவிஞரானவர்… மேலும் ராஜாவின் பார்வையிலே, நாட்டுபுறப்பாட்டு போன்ற படங்களுக்கு பின்னணி இசை (ரீ ரெக்கார்டிங்) என்ற பொறுப்பையும் கவனிக்க கொடுத்து அழகு பார்த்திருப்பார் இசைஞானி… புல்லாங்குழல் கலைஞர், பாடகர், கவிஞர் என பன்முகம் கொண்டவரானாலும் இவை அனைத்திற்கும் மேலான அற்புதமான அன்பும் மனிதநேயமும் கொண்டு அனைவரிடமும் பழகும் மாமனிதர்.
குழலாலும் குரலாலும் தாலாட்டிய சில பாடல்கள்…
தாலாட்டும் பூங்காற்று நீ அல்லவா…
வளையோசை கல கல கலவென…
மண்ணில் இந்த காதல் அன்றி…
மாலையில் யாரோ மனதோடு பேச…
சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
வெள்ளி கொழுசு மணி வேலான…
உன்னை காணாமல் நான் ஏது…
மல்லிகை மொட்டு மனச தொட்டு…
வாச கருவேப்பிலையே என் மாமன்…
புன்னை வன பூங்குயிலே…
குரலுடன் இணைந்த குழலோசை வித்தகரின் புகழை போற்றி வணங்குகிறேன்.


