சோனியா காந்தி (பிறப்பு: 9 டிசம்பர் 1946) என்பவர் இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்த ஓர் இந்தியப் பெண் அரசியல்வாதி ஆவார். இவர் ராஜீவ் காந்தியுடனான திருமணத்தின் மூலம் நேரு-காந்தி குடும்பத்தில் உறுப்பினரானார். இவர் இந்திய தேசியக் காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவி ஆவார். தனது கணவர் ராஜீவ் காந்தியின் படுகொலை நிகழ்ந்த 1991 ஆம் ஆண்டில் இருந்தே காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும் அனைத்து அதிகாரங்களையும் தீர்மானிக்கும் தலைவியாகவும் அதன் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து 1998–2017ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் அதிகார பூர்வமான தலைவியாக பொறுப்பேற்று கொண்டார். தொடர்ந்து 17 ஆண்டுகள் அப்பொறுப்பை வகித்து வந்தார். அதன் பிறகு 2014/2019 ஆகிய இரண்டு இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட அவர் மகன் ராகுல் காந்தியே கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ள செய்தார். அதன் பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று கொண்டு ராகுல் காந்தி கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகல் ராஜினாமாவை ஏற்று கொண்டு மீண்டும் சோனியா காந்தியே காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவியாக 2019 முதல் 2022 வரை தொடர்ந்தார். 2004 முதல் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவி பொறுப்பில் தற்போது வரை நீடித்து வருகிறார்.
இந்திய அரசியலில் செல்வாக்கு மிகுந்த நபர்களில் ஒருவரான இவர், 2004ல் போர்பஸ் பத்திரிகையால் உலகில் மிகச் சக்திவாய்ந்த பெண்மணிகளில் 3வது இடத்திலும் 2007ல் அந்தப் பட்டியலின் தரவரிசையில் 6வது இடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.மேலும் டைம் பத்திரிகையும் இவரை 2007 மேலும் அவர் 2008ம் ஆண்டு உலகில் உள்ள அதிகச் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராகத் திகழ்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இத்தாலி நாட்டின் வெனிடோ என்ற பிரதேசத்தில் உள்ள லூசியானா எனும் ஒரு சிறு கிராமத்தில் ஸ்டெஃபனோ மற்றும் பாவ்லோ மையினோ ஆகியோருக்கு மகளாக பிறந்தார். டுரின் என்ற நகருக்கு அருகில் உள்ள ஆர்பாஸனோவில் பாரம்பரிய ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் வளர்ந்த அவர் தன் இளமைப் பருவத்தை ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் பயின்று கழித்தார். ஒரு கட்டிட ஒப்பந்தக்காரரான அவர் தந்தை, 1983ல் மரணமடைந்தார்.அவரது அன்னையும் 2022ல் மறைந்தார். இரு சகோதரிகளும் இன்றும் ஆர்பாஸனோவில் வசித்து வருகின்றனர்.
1964ல், கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள பெல் கல்வி அறக்கட்டளையின் மொழிப் பள்ளியில் அவர் ஆங்கிலம் கற்கச் சென்றார். அப்போது அவர் கிரேக்க உணவகத்தில் பகுதிநேரமாக பணியாற்றி வந்தார். அந்த உணவகத்தில் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் சேரப் பதிவுசெய்திருந்த ராஜீவ் காந்தியை 1965ல் சந்தித்தார். பிறகு இருவரும் 1968ல் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர், அதைத்தொடர்ந்து சோனியா காந்தி தனது மாமியாரும் அப்போதைய பிரதமருமான இந்திரா காந்தியின் இல்லத்திற்குச் சென்று வாழத் தொடங்கினார்.
ராஜீவ்-சோனியா இணைக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி என்று இரு பிள்ளைகள் பிறந்தனர். செல்வாக்கு மிக்க நேரு குடும்பத்தைச் சார்ந்திருந்த போதிலும் ராஜீவ் ஒரு விமானியாக பணிபுரிந்து கொண்டிருந்த வேளையில் சோனியா தன் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பணியை மேற்கொண்டார்.


