மாரியப்பன் தான் அந்த நண்பன்.
ஒரு காலத்தில் ரகுவும் மாரியப்பனும், காளிக்கு இணை பிரியாத நண்பர்களாக இருந்தார்கள்.
ரகு இறந்த பிறகு ஊரை விட்டு காளி வந்து விட்டான். செல்விக்கும் இவனுக்கும் திருணம் நடந்த பிறகு ஊருக்கு இவன் போகவே இல்லை.
எனவே மாரியப்பனை முழுவதுமாக மறந்து போய் இருந்தான்.
இந்த வேளையில் தான் மாரியப்பன் காளியை தேடி வந்திருந்தான்.
இருவரையும் தாத்தா இணைத்து வைத்த திருப்தியுடன் பேசினார்.
“இங்க பாருங்கடே நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி கிடந்தா தாமிரபரணியை காப்பாற்ற முடியாது. அதனால இரண்டு பேரும் ஒண்ணா இருங்க. அப்படின்னாத்தான நதி யை காப்பாற்ற முடியும்”. தாத்தா பேச பேச விரக்தியாக பேசினான் மாரியப்பன்.
“எங்க காப்பாற்ற. அதுதான் பொக்லின் வைச்சி மண்ணை சும்மா 10 கிலோ மீட்டருக்கு அள்ளிட்டானுவ. தினமும் 75 டாரஸ் லாரியில கேரளாவுக்கு மண்போவுது. இவனுவ வர்ற வரத்து நம்ம ஊர் மக்க கூட ஆத்துக்கு குளிக்க போக முடிய வில்லை. பொம்பளைங்க ஆத்துக்கு ஒதுங்க கூட போக முடியில்லை. குழந்தைங்க தெருவில நடக்க முடியலை. கண்மூடித்தனமாக லாரி போவுது. லாரி போறே தூசு. நம்ம ஊரு பெரியவங்க மூச்சை அடைக்கு. எல்லோரும் என்ன செய்யன்னு தெரியமா தவிச்சிக்கிட்டு இருக்காவ”.
அதிர்ந்து நின்றனர்.
“நம்ம கண்ணு முன்னாலேயே நம்ம தாயி அழிஞ்சிக்கிட்டு இருக்கா. அவளை காப்பாத்த முடியாதா?” மாரியப்பன் தாத்தாவிடம் கேட்டான்.
“ஒரே வழி தான் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தா மட்டும்தான் ஜெயிக்க முடியுமா?” தாத்தா ஆணித்தரமாக சொன்னார்.
“முடியுமா? கவர்மெண்டை எதித்து நாம ஜெயிக்க முடியுமா?”.
“நிச்சயம் முடியும். நம்ம நினைச்சா நிச்சயம் முடியும்”. தாத்தா உறுதியாக சொன்னார்.
“சரி அதுக்கான ஏற்பாட்டை எடுங்க”.
மாரியப்பன் சொன்னான்.
“சரி முதலில நம்ம தாமிரபரணி அழிஞ்சி போயிட்டுன்னு அவர் கிட்ட எவிடென்ஸ் காட்டணுமே”
அனைவரும் அதிர்ந்தனர். “உண்மைத்தான் ஆனால் மணல் அள்ளும் போது மணல் மாபியாக்கள் ரவுடிகளை விட்டு ஆற்றுக்குள் யாரையுமே இறங்க விடவில்லையே. அப்படி இருக்கும் போது யார் போய் படத்தினை எடுத்து இருப்பார்கள்”.
மாரியப்பன் சொன்னான். நான் எல்லாத்தையும் ஏமாத்திட்டு என்னோட பிலிம் கமராவில புகைப்படம் எடுத்து இருக்கேன். நிறைய எடுக்க முடியலை. ஒரே ஒரு பிலிம் தான் எடுத்தேன். இப்ப வரும் போது திருநெல்வேயில் பிரிண்ட போட்டு கொண்டு வந்திருக்கேன். மாரியப்பன் அந்த ஆல்பத்தினை காட்ட அனைவரும் அதை பார்த்தனர்.
அதிர்தே போய்விட்டனர். மணல் நன்றாக இடத்தில் 100 அடிக்கு கீழாக குழி தோண்டி விட்டனர். களி மண்ணாக இருந்த இடத்தினை அப்படியே திரடாக விட்டிருந்தனர். இந்த கரையில் இருந்து அந்த கரைக்கு செல்ல அதிகமான பைப்பை கொண்டு வந்து போட்டு குறு பாலம் அமைத்து இங்கிருந்து மறுபுறம் லாரியை கொண்டு சென்று இருக்கிறாரக்ள். கரையை உடைத்து வழித்தடம் போட்டு இருந்தனர். குறிப்பிட்ட அடிக்கு தான் மணல் தோண்ட வேண்டும் என விதி. ஆனால் அந்த விதியெல்லாம் காத்தில் பறந்து விட்டது. இதற்கெல்லாம் எப்படி அனுமதி கிடைத்தது. அரசு மணல் அள்ளினால் நியாயமாகத்தான் இருக்கும் என்று நினைத்தார்களே. ஆனால் இங்கே எல்லாமே தலைகீழாக அல்லவா இருக்கிறது.
மொத்ததில் இந்த வேலைகள் எல்லாம் தாமிரபரணி ஆற்றில் நடந்தது என்பதை காளியால் நம்பவே முடியவில்லை. இதனால் முழு அழகையும் தாமிரபரணி இழந்து விட்டது.
செல்விக்கு அழுகையே வந்து விட்டது.
காளி சொன்னான். “நம்மலோட நம்மலா இருந்த நதியை காப்பாத்தனும். உடனே வழக்கு தாக்கல் பண்ணணும். யார் பெயருல தாக்கல் பண்ணலாம்?”. வேகமாக இருந்தான். அவனுடைய கண்கள் கலங்கி உதடுகள் துடித்தது.
“பேசாம தாத்தா பேருல தாக்கல் செய்வோம்”. காளித்தான் சொன்னான்.
“வேண்டாம் தாத்தாவுக்கு வயசு ஆகி போச்சு அடிக்கடி மதுரை கோர்ட்டுக்கு அலைய முடியாது. அதனால காளி இல்லாட்டி மாரியப்பன் பேருல வழக்கை போடுங்க”. செல்வி சொன்னாள்.
மாரியப்பன் சொன்னான். “வழக்கை நானே போடுறேன். செலவுக்கு கூட காசு வேண்டாம். நான் என் சொந்த செலவுல பாத்துக்கிறேன்”. என்றான்.
“சரி”. என அனைவரும் தலையசைத்தனர்.
மாரியப்பனுடன் காளியும் மறுநாள் அதிகாலையிலேயே மதுரை உயர் நீதி மன்றம் சென்றனர்.
அங்கே ஒரு வழக்கறிஞரை பார்த்தனர். அவரிடம் “உடனே மணல் அள்ள தடை உத்தரவு வாங்க வேண்டும் என்ன செய்வீயளோ, ஏது செய்வீயளோ தெரியாது. ஆனா எங்களுக்கு கண்டிப்பா செஞ்சு தரணும்” என்றனர்.
“ம். இப்போ நல்ல நீதிபதி இருக்காரு. இந்த நேரத்தில வந்து இருக்கீய. நான் இரண்டே நாளுல இந்த வழக்கை தாக்கல் செய்றேன்”. என்றார்.
அதோடு மட்டுமல்லாமல் புகைப்படத்தினை பார்த்து விட்டு வக்கீல் மிகவும் வருத்தப்பட்டார். “இந்த நாடு எதை நோக்கி போகுதுன்னு தெரியலையே. காட்டை அழித்தார்கள். வயல்வெளியை அளித்து விளை நிலங்களை வீட்டு மனைகளாக ஆக்கினார்கள். இப்போது மனிதனின் முக்கிய தேவையான குடிதண்ணீர் தரும் ஆற்றையே அழிக்கிறார்களே. ஆண்டவனே உமக்கே இது அடுக்குமா?” என்று வேதனை பட்டார்.
மாரியப்பன் சொன்னான். “அய்யா. நான் எவ்வளவு ரூபாய் என்னறாலும் பீஸ் தாரேன். அடுத்த வாரமே நாம ஆற்று மணலை அள்ள விடாம தடுக்கணும்”.
“கண்டிப்பா செஞ்சிரும்”. என வக்காலத்தில் கையெழுத்து வாங்கினார். மாரியப்பன் கொடுத்த பீஸை வாங்கி கொண்டார்.
இருவரையும் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தனர்.
இருவரும் நம்பிக்கோடு திருநெல்வேலி திரும்பி கொண்டிருந்தனர்.
******
மறு நாள் . தாமிரபரணி ஆற்றுக்கும் முன்பை விட இரண்டு மடங்கு அதிகமாக லாரி இறக்கப்பட்டது. பொக்கலின் இயந்திரமும் வந்து சேர்ந்தது.
ரோட்டில் மக்கள் நடமாட வில்லை. மணல்கோரி மாலை 6 மணிக்குள் மூடவேண்டும். ஆனால் தாமிபரணி ஆற்றுக்குள் இரவு முழுவதும் விளக்கு எரிக்கப்பட்டு, நூற்றக்கணக்கான ராட்சத இயந்திரங்கள் மணலை அள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தது.
தினமும் ஊர்காரர்களுக்கு வரிக்கு 500 ரூபாய் என கொடுத்து இருந்தார்கள். தட்டுபாடு இன்றி ஊர் மக்களுக்கு அந்த பணம் போய் சேர்ந்தது . எனவே உள்ளூர் மக்கள் யாரும் பேசவே இல்லை. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் மக்களுக்கு கவலையே இல்லை. தினமும் 500 கிடைக்கிறது.
பத்திரிக்கை நிருபர்கள் யாரும் சேதி சேகரிக்க ஆற்றுக்குள் வரக்கூடாது என அவர்களுக்கு ஒரு தொகை கொடுக்கப்பட்டது. அப்படி மீறி உள்ளே வந்தால் அவர்களை கட்டி வைத்து கவனிக்க ரவுடிகள் இருந்தனர். காவல் நிலையம், டிஎஸ்.பி ஆபிஸ், தாலூகா அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் என ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் தினமும் மாமூல் சென்று கொண்டே இருந்தது. எனவே யாராலும் பேச முடியவில்லை. மொத்தத்தில் அரசு குத்தகை எனவே போலீஸ் காவலோடு எல்லாமே நடந்து கொண்டிருந்தது.
எதிர்கட்சி, ஆளுங்கட்சி, மற்ற கட்சி என அனைத்து செயலாளர்கள் தலைவர்களை அழைத்து அவர்களுக்கும் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தார்கள். எனவே அவர்களும் இவர்களை கண்டு கொள்ள வில்லை.
மொத்தத்தில் தாமிரபரணியை மொட்டையடிக்கும் வேலை மிகப்பிரமாதமாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் மதுரை உயர்நீதி மன்றமோ மிகவும் மந்தமாக பணி செய்து கொண்டிருந்தது.
****
இன்று ஸ்டே வரும் என நினைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த குறிப்பிட்ட நாளில் மனு விசாரணைக்கு வந்தது. இரண்டு நாள் வாஸ்தா கொடுத்தார் நீதிபதி.
மாரியப்பன் புலம்பினான். ஒவ்வொரு நாள் வாய்தா கொடுக்கும் போதும் என் தாமிரபரணி தாயின் அங்கங்கள் அளிக்கப்படுகிறதே. ஐயகோ நான் என்ன செய்வேன். என புலம்பிக்கொண்டே இருந்தான்.
காளி அவனை தேற்றினான்.
மாரியப்பன் சொன்னான். “ஏடே காளி. பேசாமல் நான் போய் லாரி முன்னால படுத்து மறியல் செய்யப் போறேன்”.
“அட அறிவு கட்டவனே. அந்த காலத்தில நம்ம கிட்ட ஒற்றுமை இருந்தது. நாம் போய் லாரியை மறிச்சோம். நமக்கு நியாயமான போலிஸ் அதிகாரி சங்கரலிங்கம் இருந்தார். உடனே வந்து நமக்கு சாதகமாக செய்து தந்தார். ஆனால் இன்றைக்கு அப்படியா? என்ன நடக்கும் என்பதை கூட நம்மால் முடிவு செய்ய முடியாதே”
அமையதியாக இருந்தான் மாரியப்பன்.
“பொறு கொஞ்சம் பொறு. இப்போது தானே வழக்கு போட்டு இருக்கோம். எப்படியும் 10 நாளில் நமக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்”.
ஆனால் அதற்குள் 1 மாதம் போய் விட்டது. தினமும் 24 மணிநேரம் பல நூறு லாரிகள் வந்து மணலை அள்ளிக்கொண்டே போனது.
கிட்டத்தட்ட அந்த பகுதியில் உள்ள மணலை முழுவதுமே அள்ளி விட்டார்கள்.
ஒரு நாள். காலை 11 மணி இருக்கும். தமிழ்நாடு முழுவதும் பயங்கரமான பரபரப்பு.
“தாமிரபரணியில் ஆற்று மணல் அள்ள மதுரை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு” என தொலைக்காட்சியில் பிளாஷ் நியூஸ் ஓடியது.
“உள்ளூரை சேர்ந்த மாரியப்பன் தொடர்ந்த வழக்கில் மதுரை கிளை உயர்நீதி மன்றம் உத்தரவு” என்று அந்த செய்தியில் கூறினார்கள்.
“இந்த மணல் கொள்ளையை பற்றி ஆய்வு செய்ய அடுத்த வாரம் மூன்று பேர் கொண்ட வழக்கறிஞர் குழுவினர் கமிஷன் போடப்பட்டு ஆய்வு செய்ய வருவார்கள் . அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். உடனே தாமிரபரணி ஆற்றில் உள்ள பொக்கிலின் மற்றும் லாரிகள் வெளியே ஏற்றப்பட வேண்டும்” என நிதியரசர்கள் உத்தரவு.
அந்த அறிவிப்பு வந்து 1 மணிநேரத்தில் அந்த பகுதி தாசில்தார் வந்தார். மளமளவென்று போலீஸ் குவிக்கப்பட்டது. இன்னும் 1 மணிநேரத்தில் உள்ளே உள்ள லாரிகள் பொக்கிலின் இயந்திரங்கள் அனைத்தும் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டார்..
அடுத்த 1 மணிநேரத்தில் தாமிரபரணி ஆற்றுக்குள் இருந்த லாரிகள் பொக்கிலின் போன்றவை வெளியேற்றப்பட்டது.
நதிக்குள் இருந்த குண்டர்கள் ரவுடிகள் எல்லோரும் வெளியேறினார்கள். காவலுக்காக போடப்பட்ட தற்காலிக கூடாரங்களை கலைத்தனர்.
மாரியப்பனுக்கு மகிழ்ச்சி. காளியிடம் சொன்னான். “நதியை காப்பாற்றி விட்டோம். இனிமேல் நம்ம நதிப்பக்கம் அவனுவ தலை வச்சி படுக்க மாட்டானுவ” என்றான்.
காளிக்கு ஒரு ஆசை. “டேய் நம்ம நதிக்குள்ள போய் அப்படியே கொஞ்சம் காலார நடந்து பார்த்துட்டு வருவோமா?”.
“சரி”. இருவரும் பஸ் ஏறினார்கள். அன்று மாலையே கிராமம் வந்து சேர்ந்தனர். கிராமமே வெறிச்சோடி கிடந்தது. யாருமே ரோட்டில் நடமாட்டம் இல்லை. எங்கு பார்த்தாலும் போலீஸ் நடமாட்டம் இருந்தது”.
ஆற்றுக்குள் இறங்கினார்கள்.
இது நம்ம தாமிரபரணி ஆறா. எங்கெங்கும் மஞ்சள் தோகை விரித்தாற் போல கொட்டிக் கிடக்கும் மணல் எல்லாம் சூறையாடப்பட்டு விட்டதே. சில இடங்களில் மணலை குவித்து வைத்திருந்தனர். பல இடங்களில் பள்ளங்கள தோண்டி போட்டிருந்தனர். தாமிபரணி நடு ஆற்றுக்குள் இரண்டு லாரிகள் சென்று வரும் படி மிகப்பெரிய ரோடு ஒன்றை போட்டு இருந்தார்கள். இந்த கரையில் இருந்து அந்தக்கரைக்கு செல்ல குழாய் அமைத்து பாதைகள் வேறு அமைத்திருந்தனர்.
தாமிரபரணியில் பல ஊருக்கு போடப்பட்ட குடிதண்ணீர் உறை கிணறு அருகில் வரை தோண்டிய காரணத்தினால் அவர்களின் நீர் ஆதாரமே பாதிக்கப்பட்டிருந்தது.
இதையெல்லாம் யாரும் தட்டி கேட்க மாட்டார்களா? என்ன உலகம் இது. நம்ம வீட்டுக்கு பணம் வந்தால போதும் சுற்று சூழல் எப்படி ஆனாலும் நமக்கென்ன என கிராம மக்கள் கூட தங்களது மனங்களை சுருக்கிக்கொண்டார்களே.
என்றைக்கு அரசியலில் காசு கொடுத்து ஓட்டுவாங்கும் எண்ணம் மக்கள் மனதில விதைக்கப்பட்டதோ. அன்றே ஜனநாயம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. பண நாயகம் அல்லவா? தலை விரித்து ஆடுகிறது.
மக்களிடம் என்ன இப்படி நமது ஆற்றில் மணல் அள்ளி விட்டார்களே என கேட்டால், அதை பற்றி எந்தவொரு விழிப்புணர்வும் இல்லை. என்னடா உலகம் உங்கள் விரலை எடுத்து உங்கள் கண்ணையே குத்து கிறான். ஆனால் நீங்கள் அதை கண்டு கொள்ளவில்லை. கண் குருடாக போனால் போகுது. நமக்கு அன்றைக்கு என்ன கிடைக்கிறதோ. அது மட்டும் கிடைத்தால் போதும் என நினைக்கிறார்களே.
எவ்வளவு குறுகி விட்டது மனிதனின் மனம்.
இனி எப்போது இந்த தாமிரபரணியில் விளையாடுவேன். சின்னபாறையில் குதித்த பெரிய பாறை வரை உள் நீச்சல் அடிப்பேனே இனி அந்த நீச்சல் அடிக்க முடியுமா?. அய்யா. எங்கும் தெளிந்த நிரோடையாக என் தாமிரபரணி தாய் வருவாளே. கண் வலி என்றால் தண்ணீரில் குளித்துக் கொண்டே கண் இரண்டையில் 10 நிமிடம் திறந்து வைத்து விட்டால் கண் சரியாகி விடுமே. அந்த தூய்மையான தண்ணீர் இனிமேல் என் நதியில் பாயுமா? அய்யோ என் நதி நிறத்தை இழந்து விட்டது. பாதையை இழந்து விட்டது. ஊற்றை இழந்து விட்டது. மொத்தத்தில் எலும்பு கூடாய் அல்லவா இருக்கிறது. டி.பி. நோய் பிடித்தவன் போல அல்லவா ஆகி விட்டாள் என் தாய் தாமிரபரணி.
மனிதனுக்கு வயது உண்டு. என் அன்னை தாமிரபரணிக்கு வயதும் இல்லை . சாவும் இல்லை. எப்போதும் 16 வயதாக இருந்தா«ள். இன்று அவளுடைய நிலமை இப்படி ஆகி விட்டதே.
காளி ஒரிடத்தில் இருந்து ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்துவிட்டான்.
மாரியப்பன் அவனை தேற்றினான்.
“ஏலேய் அழாத நம்ம தாமிரபரணியை காப்பாற்றிட்டோம். அழாதே”. அவன் முதுகில் தட்டி ஆறுதல் கூறினான்.
“எங்கடே காப்பாத்தியிருக்கும். ஒவ்வொரு மாசமும் மார்கழி மாதம் ஒய்யாரமாய் என் நதி வெள்ளமாக வந்து கொட்டும் போது உள்ளே விழுந்து நீச்சல் அடிப்போமே. இனிமேல் முடியுமா? ஆங்காங்கே தோண்டிப்போட்டிருக்கும் கசத்தில் விழுந்து உயிரை அல்லவா விட்டு விடுவோம். நாம மட்டுமா? நம்ம ஊர் மிருகங்களும் அல்லவா? விழுந்து விடும் ஐயகோ”.
காளியை தேற்ற படாத பாடு பட்டான்.
அவனிடம் என்ன சொல்லி தேற்ற என்றே தெரியவில்லை.
“பழைய மாதிரி நம்ம நதி வரணுமுன்னா. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும்டா. ஒவ்வொரு பாறைகளும் உருண்டு வந்து. அந்த பாறைகள் ஒன்றுக்கொன்று இடிப்பட்டு. அதன் பின் தானே மணலாக மாறும். இது எல்லாம் நதியோட சொத்து ஒரே மாதத்தில அழிச்சிட்டாங்களேடா”.
“சரி. கமிஷன் வரும். இனிமேல் தாமிரபரணியில மீதி இருக்கிற இடத்தில எங்கேயும் மணல் அள்ளக்கூடாதுன்னு நிச்சயம் நிரந்தர ஆணையை பிறபிக்கும நம்ம நீதி மன்றம். அதுக்குப்புறம் ஒரு பிடி மண் கூட நம்ம நதியை விட்டு போகாது ஆமாம்”. என்றான் மாரியப்பன்.
அவர்கள் சொன்ன மாதிரியே கமிஷன் வந்தது. வந்த அதிகாரிகள் தாமிரபரணி ஆற்றக்குள் இறங்கி ஆய்வு செய்ய ஆரம்பித்தனர்.
அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது.
( நதி தொடர்ந்து பயணிக்கும்)


