தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள கிள்ளிகுளம் அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகள் பயிற்சி நடந்தது.
இந்த பயிற்சிக்கு கருங்குளம் வட்டாரம் வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் தலைமை வகித்து இயற்கை வேளாண்மை குறித்தும் பாரம்பரிய வேளாண்மை குறித்தும் விவசாயகளிடம் கூறினார்.
விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு துறையின் மூலம் கலந்து கொண்ட விதை சான்று அலுவலர் திவ்யபாரதி இயற்கை வேளாண்மையை குழுக்கள் மூலம் செயல்படுத்தும் விதிமுறைகள் குறித்தும் அதற்கு விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
வேளாண்மை அலுவலர் ராகுல் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் குமரேசன் ஆகியோர் பயிர்களில் இயற்கை முறையில் பூச்சி,நோய் கட்டுப்பாடு குறித்தும் அதற்கு பயன்படுத்த கூடிய இடுபொருட்கள் அதன் பயன்பாடு குறித்தும் விளக்கினார். ளுதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வசுந்தரம் மற்றும் வெங்கடேஷ் விதைகளுக்கு உயிரியல் பூஞ்சாணக் கொல்லி மூலம் விதைநேர்த்தி செய்வது பற்றி செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
இப்பயிற்சியில் முன்னோடி இயற்கை விவசாயிகள் முருகேசன், சரவணன் சிவபாக்கியம், ஹரி ஆகியோர் தங்கள் அனுபவங்களை பயற்சியில் மற்ற விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர். இப்பயிற்சியில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் அமைக்கப்பட்ட குழுவில் உள்ள விவசாயிகள் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


