வீரபாண்டி செல்லாயி அம்மனை சுமந்து கொண்டு கோயிலுக்கு வந்தார் சங்கரலிங்க தேவர். ஆனால் அதை யாரும் நம்ம வில்லை. ஊரில் உள்ள ஆதிக்க சாதியினர் சங்கரலிங்க தேவரை உயிரோடு புதைக்க ஏற்பாடு செய்தனர்.
இதற்காக கோயில் முன்பு மிகப்பெரிய குழி தோண்டப்பட்டது. அந்த குழிக்குள் இவரை உட்கார வைத்து காற்றுபுகாத வண்ணம் மூடினர். “அம்மன் என்று பொய் சொல்லுகிறான். இவன் மூச்சி முட்டி சாகட்டும்” என திட்டமிட்டனர்.
“இது அம்மனின் உத்தரவு” என நினைத்த சங்கரலிங்க தேவர் பிரம்பு மற்றும் விபூதி கொப்பறை யுடன் அந்த குழிக்குள் அமைதியாக இருந்தார்.
மறுநாள் காலையில் மூடிய குழியை திறந்து பார்த்தனர். என்ன ஆச்சரியம்.
அங்கு எப்படி குழிக்குள் போகும் போது சங்கரலிங்க தேவர் இருந்தாரோ அதுபோலவே வாடாமல் வதங்காமல் இருந்தார். அனைவரும் அதிர்ந்தனர் . அந்த வீரபாண்டி செல்லாயி அம்மனின் அருள் முழுமையாக இவர் மீது உள்ளது என உணர்ந்தனர். எனவே அனைவரும் கையை கூப்பி வணங்கி நின்றனர்.
அடுத்த கட்டம் “ஊய்” என்ற சத்தத்துடன் குழிக்குள் இருந்து மேலே வந்த சங்கரலிங்க தேவர் ஆதாழி போட்டு ஆட ஆரம் பித்தனர். அவரின் ஆட்டத்தினை யாராலும் கட்டுப் படுத்த இயல வில்லை. அவரை சாமியாடி என அனைவரும் ஏத்துக் கொண்டனர்.
இந்த சமயத்தில் இந்த கோயிலில் பூசாரியாக இருந்தவர் தங்க கம்பர். இவர் சாதரண ஆளு அல்ல. மிகப்பெரிய மந்திரவாதி. பல சித்து வேலைகளை செய்பவர். கோயிலில் அம்மனின் அருள் மிகப் பெரியதாக இருந்தாலும். அவர் அதை நல்ல வழியில் பயன்படுத்த வில்லை.
இவர் மிகவும் ஆச்சரமான வீரபாண்டி செல்லாயி அம்மன் கோயிலில் உள்ளே அமர்ந்து கொண்டு சாரயத்தினை பாட்டிலில் வைத்து குடிப்பார். அதோடு மட்டு மல்லாமல் ஆட்டு கறியை வறட்டி வைத்து கோயில் சன்னிதானத் துக்குள் அமர்ந்து சாப்பிடுவார். யாராவது சந்தேகம் பட்டு அவரை தட்டிக் கேட்டால், அவர் அந்த சாராய குப்பியை வந்தவர் கையில் கொடுப்பார். அது பன்னீராக மணக்கும். ஆட்டுகறி அரளி பூவாக மாறி விடும். இதனால் அனைவரும் அதிர்ந்து நின்றனர்.
எனவே இவர் தவறு செய்கிறார் என்று தெரிந்தும் கூட யாராலும் தட்டிக்கேட்க முடியாது. “ஏன் அம்மன் தட்டிக் கேட்கலாமே” என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அம்மனையே தனது கையில் வைத்திருக்கும் மாந்திரிக மையால் கட்டிப்போட்டு வைததிருந்தார்.
இவர் உடுத்திய அழுக்கு துணி உள்பட வீட்டில் உள்ளவர்கள் துணி அனைத்தை ஒன்று சேர்த்து கட்டி, அதை சிறு குழந்தையான வீரபாண்டி செல்லாயி அம்மன் தலையில் ஏற்றி சுமக்க வைப்பார். இதற்காக மையை வைத்து அம்மனை மயக்கி விடுவார். அம்மனும் இவர் சொல்லும் சொல்லுக்கு ஆடுவார்.
அந்த அம்மனை துணி மூடையை சுமக்க வைத்து நடத்தி கூட்டிச்சென்று அருகில் காட்டில் உள்ள ஆரைக்குளத்தில் துணியை துவைக்க வைப்பார். அதன் பின் அந்த துணியை காயப்போட்டு, அதை மீண்டும் கட்டி அம்மன் தலையில் ஏற்றி ஊருக்குள் கொண்டு வருவார்.
இதனால் ஊர் மக்கள் இவரை கண்டாலே பயந்து நடுங்கு வார்கள். ஆனால் இந்த உலகையே கட்டி காப்பாற்றும் அம்மன் இதுபோன்ற சம்பவங்களுக்கு இடம் கொடுப்பாரா என்ன? அவர் நல்ல நேரத்தினை பார்த்து காத்து கொண்டிருந்தார்.
ஆனால் பூசாரியின் ஆட்டமோ மிக அதிகமாக இருந்தது. இந்த உலகை காக்கும் அம்மனே நமது கையில் இருக்கிறாள். யார் நம்மை என்ன செய்ய இயலும் என இறுமாப்பாக இருந்தார்.
ஆனால் விதி வேறு மாதிரி வேலை செய்தது.
ஒருநாள். அம்மனை எப்போதும் போலவே வசியம் செய்து அழுக்கு துணியை சுமக்க வைத்தார். ஆரைக்குளத்தில் கூட்டிச்சென்று அழுக்கு துணியை இறக்கினார்கள்.
அதிகமான சுமை இருந்த காரணத்தினால் சிறுமியாக இருந்த அன்னை வீரபாண்டி செல்லாயி அதை தூக்கி வீச முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
அந்த சமயத்தில் தன் கையில் வைத்திருந்த மையை கீழே வைத்து விட்டு, வீரபாண்டி செல்லாயியை தனது கையால் ஓங்கி அறைந்தார் பூசாரி.
இது தான் சமயம் என தனது காலால் மை டப்பாவை தள்ளி விட்டாள் அம்மை. அடுத்த நிமிடம் தன்னை தாக்க வந்த மந்திரவாதி கையை இறுக்கப்பிடித்து அவனை அப்படியே தலைக்குமேல் தூக்கி அருகில் ஒரு பாறையில் ஓங்கி அடித்தாள்.
அவ்வளவு தான் அடுத்த நிமிடம். அவனது தலை சுக்கு நூறாக சிதறியது. சம்பவ இடத்திலேயே பலியானார்.
பூசாரியை பலி வாங்கிய அன்னை வீரபாண்டி செல்லாயி, அதே கோபத்துடன் கோயிலை நோக்கி வந்தாள். அவளின் கோபம் தணியாமல் கோயிலுக்குள் நுழைந்தாள். அதன் பின் சன்னிதானத்தில் அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலைக்கு வந்தாள்.
வீட்டில் படுத்துகிடந்த சாமியாடி சங்கரலிங்க தேவர் கனவில் இந்த காட்சி தெரிந்தது. அதோடு மட்டுமல்லாமல் அம்மன் உருட்டிய கண்ணுடன்
“பூசாரியை நான் சம்காரம் செய்து விட்டேன். ஊர்காரர்களை கூட்டிக்கொண்டு போ. அவன் கெட்டவன் தான். ஆனாலும் என்னை தொட்டு பூஜை செய்தவன். எனவே அவனுக்கு நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்” என்றாள்.
நடுராத்திரியில் முழித்தவர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.
கோயில் நிர்வாகிகளை நடுராத்திரியோடு ராத்திரியாக தட்டி எழுப்பினார். அம்மன் கூறிய விவரத்தினை சொன்னார்.
ஆனால் யாரும் கேட்பதாக தெரியவில்லை.
“அவன் எவ்வளவு பெரிய மந்திரவாதி. அவன் மைக்கு அம்மன் மயங்கி கிடக்கா. அவ எங்க இவனை கொல்லப்போறா. போய் படு” என இவரை விரட்டி விட்டனர்.
தூக்கம் வராமல் சங்கரலிங்க தேவர் விடிய விடிய தவித்துக் கொண்டிருந்தார்.
மறுநாள் அதிகாலை பாறையில் மந்திரவாதி ரத்தவெள்ளத்தில் தலை சிதறி கிடப்பதை கேள்விபட்டு ஒடி போய் பார்த்தனர் நிர்வாகிகள். அதன் பின் சங்கரலிங்க தேவரின் கனவில் அம்மன் கூறியபடியே அவரை நல்லடக்கம் செய்தனர்.
தற்போதும் அந்த பாறை “பேயறைஞ்சான் பாறை” என அழைக்கப்படுகிறது.
வீரபாண்டி செல்லாயி அம்மன் கோயிலில் சாமியாடி உயிரோடு இருக்கும் போதே அம்மனை வணங்கும் படி சிலை வைத்து இருக்கிறார்கள். ஒரு கோயிலை கட்டியவருக்கு சிலை வைப்பதை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இங்கே ஆச்சரியமாக இருக்கிறதே. அது எப்படி நிகழ்ந்தது என்று கவுன்சிலர் செல்வ சங்கரிடம் கேட்டோம். அவர் கூறிய பதில் நம்மை ஆச்சரியப்பட வைத்தது.
(நதி வற்றாமல் ஓடும்)


