கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 5-ம் நாளான நேற்று முன்தினம் சூரபத்மனின் தம்பியான தாரகாசூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
6-ம் நாள் திருவிழாவான நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு உச்சிகால பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தது. 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி பல்லக்கிலும் வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பூஞ்சப்பரத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
மதியம் 12 மணியளவில் சண்முகர் அர்ச்சனை வழிபாடு நடந்தது. மாலை 3 மணியளவில் முருகப்பெருமான் வீரவேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து 4.30 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
விழாவில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., கழுகுமலை அ.தி.மு.க. நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராஜகுலராமர்பாண்டியன், குருவிகுளம் தெற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் செந்தில்நாதன், தி.மு.க. மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பொன்னுப் பாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கழுகுமலை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
7-ம் நாள் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா வந்து தடம் பார்த்தல் நிகழ்ச்சியும், நாளை (திங்கட்கிழமை) தபசுக்காட்சி, நாளை மறுநாள் இரவு 7 மணியளவில் திருக்கல்யாணம், 22-ந் தேதி சுவாமி, வள்ளி- தெய்வானை அம்பாள்களுடன் பெரிய பல்லக்கிலும், சோமாஸ் கந்தர் சிறிய பல்லக்கிலும் வீதிஉலா வந்து பட்டினபிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
23-ந் தேதி மாலை 6 மணியளவில் மஞ்சள் நீராட்டு விழாவுடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


