ஏரல் ஹோட்டலில் சமையல் மாஸ்டரை கட்டையால் தாக்கி கொலை செய்த சப்ளையரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் அம்மாபேட்டையைச் சேர்ந்த ராசு மகன் சேகர் (64) என்பவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். அதே ஹோட்டலில் நெல்லை மாவட்டம் களக்காடு கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் சிவசூரியன் (27) என்பவர் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார்.
இருவரும் வேலை முடிந்த பின்பு இரவில் ஓட்டலில் தங்கி விடுவார்களாம். இதற்கிடையே நேற்று சிவசூரியன் வேலைக்கு மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை வேலையை விட்டு ஹோட்டல் உரிமையாளர் நீக்கிவிட்டாராம். இதனால் சிவ சூரியன் ஓட்டலை விட்டு சென்றவர் இரவு 11 மணிக்கு ஹோட்டலில் படுத்து தூங்குவதற்கு வந்தாராம். அப்போது சமையல் மாஸ்டர் சேகருக்கும் சிவசூரியனுக்கும் தகராறு ஏற்பட்டதாம்.
இதில் ஆத்திரமடைந்த சிவசூரியன் சமையல் மாஸ்டர் சேகரை கீழே தள்ளிவிட்டு விறகு கட்டையால் தலையில் தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்த சேகர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏரல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர் கொலை செய்யப்பட்ட சேகர் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து சிவ சூரியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் ஏறல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


