தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஸ்ரீவைகுண்டம் பெரும்பத்து பகுதியைச் சேர்ந்த ராஜா (எ) ராசையா மகன் பாலமுருகன் (26) என்பவர் எந்தவித அனுமதியுமின்றி சாக்கு மூட்டையில் ஆற்று மணலை திருடிச் சென்றது தெரியவந்தது.
உடனே போலீசார் பாலமுருகனை கைது செய்து அவரிடமிருந்த 23 மூட்டை ஆற்று மணலையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி கைது செய்யப்பட்ட பாலமுருகன் மீது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உட்பட 8 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


