மனித வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் எதிர்பார்ப்போடு நகருகிறது.ஒவ்வொரு மனிதனும் எதிர்காலத்தை மனதில் கொண்டு வாழ்வை மேற்கொள்ள அவரவர் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்தால் உயரலாம். “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்” என்பது பழமொழி.
“வாழ்க்கையில் என்றும் அகலக் கால் வைக்கக் கூடாது”என்று பெரியோர்கள் சொல்வார்கள். தன் தகுதிக்கு மீறி செலவு செய்து பழகக்கூடாது. நாம் ஒவ்வொருவரும் நமக்காக வாழ வேண்டும். ஊருக்காக ஊர் மெச்ச வாழ்பவர்கள் இன்று பெருகி விட்டார்கள்.அந்த ஊரே ஒரு மனிதன் தாழ்ந்து போகும் போது கைகொட்டி சிரிக்கும். நிரந்தரமான நிலையான வருமானம் இருந்தால் தான் நிம்மதியாக வாழ்வை நடத்த முடியும்.”40 வயதுவரை பொருளை நீ தேடு 40 க்கு பின் பொருள் உன்னைத் தேட வேண்டும்” என்று வைரமுத்து தன் கவிதையில் குறிப்பிடுவார்.
வருகின்ற வருமானத்தை மனதில் கொண்டு வரவு செலவு வைத்துக் கொள்வது நல்லது வரவுக்கேற்ற செலவு செய்யாதவர்கள் வாழ்க்கை சூறைக்காற்றில் சிக்கிய துடுப்பு இழந்த படகு போல தள்ளாடத் தொடங்கும்.
“முன் ஏர் வழிப் பின் ஏர் செல்லும்”என்ற வாக்கை உணர்ந்து பின்பற்றி வழிமுறையைக் கடைபிடிக்க வேண்டும்.
அவ்வாறு கடைபிடிக்கும் வழக்கத்தில் தலையாய ஒன்று “சேமிப்பு” என்பதாகும்..சேமிக்கும் பழக்கத்தைக் கைக்கொண்டால் எதிர்காலம் குறித்து கவலை இல்லாமல் வாழலாம்.
“கிடைச்ச பணத்தை சிக்கனமா செலவு செய்ய பத்திரமா அம்மா கையில கொடுத்து போடு செல்லக்கண்ணு அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு என்பது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகள்.
“இன்றைய நம் சேமிப்பு நாளைய நம் பாதுகாப்பு”என்று அரசாங்கம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சாரம் செய்து வருகிறது.சேமிக்கும் பழக்கத்தை மக்களிடையே தனியார் நிறுவனங்களும் ஊக்குவிக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சேமிக்கும் பழக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வை இன்னும் ஏற்படுத்த வேண்டும்
1970 களில் ‘சஞ்சாயிகா’ என்ற பெயரில் பள்ளிக்கூடங்களில் சேமிப்புக் கணக்கை ஆரம்பித்து அரசாங்கம் ஊக்கப்படுத்தியது.
பழைய காலங்களில் பெற்றோர் தம் பிள்ளைகளின் கைகளில் காசு பணம் கொடுத்துப் பழக்கப்படுத்த மாட்டார்கள்.
“ஒங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்! நாங்கள் வாங்கி தருகிறோம்” என்று கூறி அவர்களே தேர்ந்தெடுத்து வாங்கிக் கொடுப்பார்கள். துணிமணிகள் கூட பெற்றோர் தேர்ந்தெடுத்துக் கொடுத்த காலம் மலையேறிவிட்டது.இன்றைய காலத்தில் தேர்ந்தெடுக்கும் உரிமை பிள்ளைகள் கைக்கு மாறி விட்டது. இன்றைய இளைஞர்கள்,இளைஞிகள் தற்காலத்தில் தாங்கள் சம்பாதிக்கவும்
வரவு செலவு பார்க்கவும் தொடங்கிவிட்டார்கள்.பெற்றோர்கள் பெரியவர்கள் அவர்களைக் கட்டுப்படுத்தினால் அவர்களுக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது.
“தங்களுக்கு வரும் வருமானத்தில் சிக்கனமாகச் செலவழித்து விட்டுச் சிறு தொகையைச் சேர்த்து வைக்க வேண்டும்” என்ற நல்ல பழக்கத்தைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். இத்தகைய சேமிக்கும் பழக்கம் என்பது இயல்பிலேயே வளர்ப்பிலேயே வரவேண்டும். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக பெற்றோர்கள் சேமித்து வைக்கிறார்கள் சில வேளைகளில் நாம் செய்யும் சேமிப்பு நமக்குப் பயன்படும் சூழலும் ஏற்படலாம் ஆபத்துக் காலங்களில் நாம் இன்சூரன்ஸ் போட்டு இருந்தால் நமக்கு ஆகும் செலவுகளுக்கு அது பயன்படும் .மற்றவர் கையை எதிர்பார்க்கத் தேவையில்லை.
பணத்தைச் சேமிப்பது மட்டும் சேமிப்பு அல்ல. வருங்காலத்தில் குடிநீருக்காக மூன்றாம் உலகப் போர் வரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வருங்கால சந்ததியினருக்காகக் குடிநீரைச் சேமிக்கப் பழக வேண்டும்.சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
மழைக்காலங்களில் தமக்குத் தேவைப்படும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் எறும்புகள் தமக்குத்தாமே உணவுப்பொருட்களைச் சேமித்து வைத்துக் கொள்கின்றன. தேனீக்கள் தேனைச் சேகரிக்கின்றன; சேமிக்கின்றன.
விவசாயி தன் ஆடு, மாடு, கன்றுகளுக்குத் தேவையான தீவனத்தைச் சேமித்து வைப்பான். விதை நெல்லைப் பத்திரப்படுத்தி –பதப்படுத்தி குதிரில் அடுத்த பருவத்திற்குப் பாதுகாத்து வைப்பான்.. இதுவும் ஒருவகை சேமிப்புதான்.
கிராமப்புற வீடுகளில் அந்தக் காலத்தில் உப்புப்பானை புளிப்பானை இவற்றில் வீட்டிலுள்ள பெண்கள் காசுகளைச் சேமித்து வைத்திருப்பார்கள்.மாதக் கடைசியில் குடும்பச் செலவுக்குத் தேவைப்படும் போது கொடுத்து உதவுவார்கள்.
இவ்வாறு சேமிக்கும் பழக்கம் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒவ்வொரு தனிநபரிடமிருந்தும் தொடங்க வேண்டும்.”இன்றைய நம் சேமிப்பு நாளைய நம் பாதுகாப்பு” என்பதை அனைவரும் உணர வேண்டும். தற்காலச் சூழலில் திடீரென சம்பளம் வராத சூழல் ஏற்படுகிறது. அத்தகைய காலகட்டத்தில் நம் சேமிப்பு நமக்குக் கைகொடுக்கும்.
கட்டுரையாளர்
*******************
முனைவர் வ.ஹரிஹரன்
தமிழ்ப் பேராசிரியர்
பி.எம் டி கல்லூரி
மேலநீலிதநல்லூர்627 953


